இளையராஜா விஷயத்தில் மோதிக்கொண்ட இயக்குநர்கள்

செவ்வாய், 29 நவம்பர் 2016 (17:52 IST)
இசைஞானி இளையராஜா, யுவன் சங்கர் ராஜா போல் இசையமைக்க வேண்டும் என்று இயக்குநர் கரு. பழனியப்பனும், யுவன் சங்கர் ராஜா போல இசையமைக்க தேவையில்லை என்று இயக்குநர் பேரரசும் கூறியுள்ளது விவாதத்தை கிளப்பியுள்ளது.


 

எம்.கே.பிலிம்ஸ் சார்பில் சி.முத்துகிருஷ்ணன் தயாரித்துள்ள படம் ‘ராணி’. சாய் தன்ஷிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தை சமுத்திரகனியின் இணை இயக்குனர் எஸ். பாணி இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், இசையமைப்பாளர் இளையராஜா, சாய் தன்ஷிகா, இயக்குநர் பாணி, தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன், இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் கரு.பழனியப்பன், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்துகொண்டு பேசிய இயக்குனர் கரு.பழனியப்பன், ”நான் யாரிடமும் இதுவரை கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும் அதனால் தான். இப்போது முதன் முறையாக இசை ஞானி இளையராஜாவிடம் கோரிக்கை வைக்க போகிறேன்.

அவர், யுவன் ஷங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம். அப்படி இருக்கும் போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும் போது அதை பல ஆண்டுகள் தாண்டி அனைவரும் ரசிப்பார்கள் என்பது உறுதி” என்றார்.

ஆனால், பின்னர் பேசிய இயக்குநர் பேரரசு, “நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமைப்பட்டுள்ளேன் ஒருவர், என்னுடைய முன்னாள் காதலியின் கணவர். இன்னொருவர் இளையராஜா.

நாம் எல்லோரும் பயணத்தின்போது கேட்கும் பாடல்கள் அனைத்தும் இளையராஜாவின் பாடல்கள் தான். அவருடைய பாடல்களை கேட்டுக்கொண்டே 2ஆயிரம் கிலோ மீட்டர் தாண்டி கூட பயணிக்கலாம்.

எனக்கு இளையராஜாவிடம் ஒரு கோரிக்கை. அவர் இது போன்ற பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு.பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம்.

உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான். ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் ஒரு இளையராஜாவை மிஞ்ச முடியாது என்பது தான் உண்மை” என்றார் இயக்குனர் பேரரசு.

ஒரே இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கரு.பழனியப்பனும், இயக்குநர் பேரரசும் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்