‘சார்லி’ ரீமேக்கை விஜய் கைவிட்டது ஏன்?

வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (17:17 IST)
மலையாளத்தில் வெளியான ‘சார்லி’ படத்தை, தமிழில் ரீமேக் செய்வதாக இருந்தார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ஆனால், திடீரென அந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்னவென்று இப்போது தெரியவந்துள்ளது.


 
 
துல்கர் சல்மான், பார்வதி நாயர் நடிப்பில் வெளியாகி, ஹிட்டான படம் ‘சார்லி’. துல்கர் சல்மான் கேரக்டரில் மாதவனும், பார்வதி நாயர் கேரக்டரில் ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவியும் நடிப்பதாக இருந்தது. ஆனால், இந்தத் திட்டம் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
 
அதற்குப் பதிலாக, சாய் பல்லவியை வைத்து ‘கரு’ என்ற கிரைம் திரில்லர் படத்தை இயக்கப் போகிறார் விஜய். மிக குறுகிய காலத்திலேயே படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிட்டுள்ளனர். லைக்கா புரொடக்‌ஷன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
 
தற்போது விஜய் சேதுபதியுடன் ‘விக்ரம் வேதா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் மாதவன். புஷ்கர் – காயத்ரி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியாததால், விஜய் கேட்ட தேதிகளை மாதவனால் ஒதுக்கித் தரமுடியவில்லையாம். எனவே, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்தபிறகு ரீமேக்கைத் தொடங்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதற்குள் ‘கரு’ படத்தை முடிக்கத் திட்டமிட்டுள்ளார் விஜய்.

வெப்துனியாவைப் படிக்கவும்