தெலுங்கில் பிளாக்பஸ்டரான அர்ஜுன் ரெட்டிப் படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம்மின் மகன் துருவ் நடிப்பதாக ஒப்பந்தமானதும், அதை இயக்கித் தர விக்ரம் தன் நண்பன் பாலாவை அணுகினார். ரீமேக் படங்களை இயக்கும் எண்ணமே இல்லாத பாலா விக்ரம்மிற்காக இதை ஒத்துக்கொண்டார்.
ஆனால் முழுப்படத்தையும் முடித்துக்கொடுத்த பின் பாலாவைத் தவிர தயாரிப்புத் தரப்பில் உள்ள யாருக்குமே இந்த படத்தில் நம்பிக்கை இல்லையாம். தயாரிப்புத் தரப்பு மற்றும் விக்ரம்மிடம் இருந்து வந்த கமெண்ட்ஸ்கள் எதையும் பாலா காதில் வாங்காததால் படத்தைக் கிடப்பில் போட்டுவிட்டு புதிய குழுவோடு படப்பிடிப்பு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதிய வெர்ஷனை இயக்குவதற்காக துருவ் விக்ரம் தவிர்த்த மற்ற அனைத்து நடிகர் நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. இப்போது வர்மாவின் ஒளிப்பதிவாளராக பாலிவுட் புகழ் ரவி கே சந்திரன் ஒப்பந்தமாகியுள்ளார். கதாநாயகியாக நடிகை பனிதா சந்தூ கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனராக கவுதம் மேனன் நியமிக்கப் படுவார் எனப் பரவலாக கூறப்பட்டாலும் அது சாத்தியமாவதற்கான வாய்ப்புகள் குறைவுதான். தெலுங்கு அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் வங்காவின் உதவியாளர் கிரி சாயாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. அர்ஜுன் ரெட்டியின் புதிய வடிவத்தை இவரே இயக்குவார் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.