நீலம் - சிறுவர்களுக்காக இயக்குனர் ரஞ்சித் தொடங்கிய அறக்கட்டளை

வெள்ளி, 17 ஏப்ரல் 2015 (12:43 IST)
அட்டக்கத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பா.ரஞ்சித். அடுத்து இவர் இயக்கிய மெட்ராஸ் படம் இவருக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. 
 
இவர் தற்போது நீலம் என்ற அறக்கட்டளையை தொடங்கி, அதில் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காத சிறுவர்களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை பெரிய இடத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளார். 
 
இதன் முதற்கட்டமாக சென்னை வியாசர்பாடியில் இந்த அறக்கட்டளையை தொடங்கியுள்ள ரஞ்சித், அங்குள்ள ஏழை சிறுவர்களுக்கு நடனம், ஓவியம், கராத்தே, குங்பூ ஆகிய பயிற்சிகளை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனியாக பயிற்சியாளர்களையும் நியமித்துள்ளார். 
 
தற்போது 100 சிறுவர், சிறுமிகள் இதில் பயின்று வருகிறார்கள். 10 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் தங்களுக்கு பிடித்தமான பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். 
 
இதுதவிர, சென்னையை அடுத்த கரலப்பாக்கத்திலும் தனது அறக்கட்டளை மூலம் 40 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவதுதான் ரஞ்சித்தின் திட்டம். இதற்கு அவரது நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்