இயக்குநரும், நடிகருமான சேரனின் மகளுக்கு பிணையில் வர முடியாத பிடியாணை

சனி, 20 ஆகஸ்ட் 2016 (13:18 IST)
இயக்குநரும், நடிகருமான சேரனின் "சிடூஎச்' நிறுவனத்தில் முதலீடு செய்த வைப்புத் தொகையைத் திரும்பத் தராமல் ஏமாற்றியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாத அதன் நிர்வாகியான சேரனின் மகளுக்கு தருமபுரி நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்துள்ளது.


 
 
இயக்குநரும் நடிகருமான சேரன் கடந்த ஆண்டு "சிடூஎச்' என்ற திரைப்பட விநியோக நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். திரைப்படங்களை "சிடி'ஆக வீட்டுக்கே விற்பனை செய்யும் முயற்சியாக மாவட்டங்களில் விநியோகஸ்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
 
இதன்படி, தருமபுரி மாவட்டத்துக்கான விநியோகஸ்தராக பிரசன்னா வாசுதேவன் நியமிக்கப்பட்டார். சேரனின் நிறுவனம் தொடர்ந்து சரியாக செயல்படாததை அடுத்து, தான் அளித்த வைப்புத் தொகையைத் திரும்பக் கேட்டுள்ளார் அவர். இதையடுத்து ரூ. 4.53 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டிருக்கிறது.
 
ஆனால், அந்தக் காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்ப வந்ததை அடுத்து, பிரசன்னா தருமபுரி மாவட்ட விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
 
இதனைத் தொடர்ந்து சேரனின் மகள் நிவேதா பிரியதர்ஷிணி ஆஜராகவில்லை. இதேபோல, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போதும் அவர் ஆஜராகவில்லை.
 
எனவே, வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகவேல் ராஜன் பிணையில் வெளிவர முடியாத பிடியாணையைப் பிறப்பித்து, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்