இடிக்கப்படும் சிவாஜியின் சாந்தி திரையரங்கு

வெள்ளி, 20 மே 2016 (17:36 IST)
நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சென்னை அண்ணா சாலையிலுள்ள சாந்தி திரையரங்கு இடிக்கப்படுகிறது.


 
 
சென்னை அண்ணா சாலையின் அடையாளங்களில் ஒன்று சாந்தி திரையரங்கு. 1961 முதல் செயல்பட்டு வரும் சாந்தி திரையரங்கில் சிவாஜி, பிரபு நடித்த திரைப்படங்கள் தவறாமல் திரையிடப்படும். இப்போது விக்ரம் பிரபு நடிக்கும் படங்கள். சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்த சந்திரமுகி திரைப்படம் சாந்தியில் 888 நாள்கள் ஓடி சாதனைப் படைத்தது.
 
சிவாஜி ரசிகர்களின் ஓர் அங்கமாகிப் போன சாந்தி திரையரங்கை மாற்றம் செய்து சாந்தி, சாய் சாந்தி என இரு திரையரங்குகளாக மாற்றினர். தற்போது இவ்விரு திரையரங்குகளும் இடிக்கப்பட உள்ளன.
 
சாந்தி திரையரங்கை இடித்து அங்கு வணிக வளாகம் கட்டுவதற்கான முயற்சி முன்பே மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் கடந்த 16 -ஆம் தேதி இரவுக்காட்சியுடன் சாந்தி, சாய் சாந்தி திரையரங்குகள் மூடப்பட்டன. விரைவில் இவ்விரு திரையரங்குகளும் இடிக்கப்பட்டு வணிக வாளாகம் கட்டப்பட உள்ளது. இந்த வணிக வளாகத்தில் 4 திரையரங்குகளை கொண்ட மல்டி பிளக்ஸும் திறக்கப்பட உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்