ஸ்ருதிஹாசன் மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு

சனி, 28 மார்ச் 2015 (12:06 IST)
பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற நிறுவனம் தமிழ், தெலுங்கில் கார்த்தி, நாகார்ஜுனாவை வைத்து புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ப்ரெஞ்சில் வெளியான இன்டச்சபிள்ஸ் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இந்தப் படத்தை உருவாக்குவதாக கூறப்படுகிறது.
 

 
இதில் நாயகியாக ஸ்ருதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் படத்திலிருந்து ஸ்ருதி திடீரென விலகினார். அதுபற்றிய செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். 
 
ஸ்ருதியின் இந்த விலகலால் அதிருப்தியடைந்த தயாரிப்பாளர் தரப்பு ஸ்ருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
 
ஸ்ருதிஹாஸன் எங்கள் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அவரிடம் கால்ஷீட் பெற்றோம். இப்போது பாதிப் படம் முடிந்த நிலையில், தன்னால் இந்தப் படத்தில் நடிக்க முடியாது என ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதனால் எங்களுக்கு மற்ற நடிகர்களிடம் வாங்கிய ஒப்பந்த தேதிகளும் வீணாகிவிட்டது. இவருடைய இந்த செயலால் எங்களுடைய பணம் இழப்பு மட்டுமில்லாமல், எங்கள் நிறுவனத்திற்கு உண்டான நன்மதிப்பும் இழக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்ருதிஹாஸன் செயலால் எங்களுக்கு பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரமும் வீணாகிவிட்டது. மேலும் மற்ற நடிகர்களிடம் வாங்கிய தேதிகளை மாற்ற வேண்டிய கட்டாயம் உருவாகிவிட்டதால், அந்த நடிகர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மீதான நல்லெண்ணமும், மரியாதையும் இழக்கப்பட்டுள்ளது. அவருடைய இந்த நடவடிக்கை மீண்டும் தொடரக்கூடாது என்பதற்காகவும் மற்றும் எங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதாலும் சுருதி மீது சிவில் மற்றும் கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
 
இந்த மனுவை  ஏற்றுக் கொண்ட நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை ஸ்ருதிஹாஸன் புதுப் படங்களில் ஒப்பந்தமாகக் கூடாது, அவரை எந்த நிறுவனமும் ஒப்பந்தம் செய்யவும் கூடாது என்றும், இந்த கிரிமினல் குற்றத்துக்காக அவரை போலீசார் விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்