சைனா பாக்ஸ் ஆபிஸ் 35 கோடிகளுடன் இரண்டாவது இடத்தில் அமீர் கானின் பிகே

செவ்வாய், 26 மே 2015 (10:34 IST)
இந்திய திரையரங்குகளில் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, இந்திய சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த வருடம் வெளியான பிகே பெற்றது. ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் அமீர் கான், அனுஷ்கா சர்மா நடித்த இப்படம் சென்ற வாரம் சைனாவில் வெளியானது.
 
சைனா உலக சினிமாவின் முக்கிய சந்தையாக உருவெடுத்து வருகிறது. முக்கியமாக ஹாலிவுட் படங்கள். யுஎஸ்ஸில் ஒரு ஹாலிவுட் படம் எவ்வளவு வசூல் செய்யுமோ, அதில் 80 சதவீதம் சைனாவிலும் வசூலாகிறது. அவெஞ்சர்ஸ் ஏஜ; ஆஃப் அல்ட்ரான் இதுவரை சைனாவில் 1300 கோடிகளைத் தாண்டி வசூல் செய்துள்ளது.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இந்திப் படங்கள் மட்டுமே அவ்வப்போது சைனாவில் வெளியாகும். ராஜ்குமார் ஹிரானி, அமீர் கான் கூட்டணியின் 3 இடியட்ஸ் இங்கு பரவலான வரவேற்பை பெற்றது. இங்கு அதிகம் வசூல் செய்த இந்திப் படம் என்றால், அமீர் கானின் தூம் 3. அப்படத்தின் மொத்த வசூலை இரண்டாவது நாளிலேயே கடந்து பிகே சாதனை படைத்துள்ளது.
 
சென்ற வெள்ளிக்கிழமை சைனாவில் வெளியான பிகே முதல் மூன்று தினங்களில் 5.14 யுஎஸ் டாலர்களை வசூலித்து சைனா பாக்ஸ் ஆபிஸில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. நமது ரூபாயில் ஏறக்குறைய 35 கோடிகள். பிகே தயாரிப்பாளர்களே இவ்வளவு அமோக வரவேற்பை எதிர்பார்க்கவில்லை.
 
தொடர்ந்து சைனாவில் இந்தியப் படங்கள் கவனம் பெற்றால், அதன் சந்தை நம்ப முடியாத அளவுக்கு விரிவடைய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்