திருடன் போலீஸுக்காக தொப்பை வளர்த்த தினேஷ்

திங்கள், 23 ஜூன் 2014 (10:22 IST)
எந்த கேரக்டருக்கும் நான் பெரிசாக ஹோம் வொர்க் செய்றதில்லை. கேமராவுக்கு முன்னால் வந்ததும் நடிக்க ஆரம்பிப்பேன், கட் சொன்னதும் நிறுத்திக் கொள்வேன்.
 
இது நடிகர் மோகன்லால் சொன்னது. இதற்குப் பெயர்தான் நடிப்பு. கதாபாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அதற்கேற்ப கேமராவின் முன் ரியாக்ட் செய்துவிட்டு, கட் சொன்னதும் பழைய தனது சொந்த அடையாளத்துக்கு திரும்பிவிடுவது. ஆனால் இளம் நடிகர்கள் அப்படியில்லை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதுமாதிரியே எப்போதும் பேச, நடக்க ஆரம்பித்து விடுகின்றனர். அதனால் படம் வெளியான பிறகும் அந்த கதாபாத்திரத்தின் மேனரிசங்களுடனே சிலகாலம் வாழ நேர்கிறது.
 
குக்கூ படத்துக்காக கழுத்தை நீட்டி வெட்டி நடித்த அட்டகத்தி தினேஷ் கொஞ்ச நாள் அப்படிதான் திரிந்து கொண்டிருந்தாராம் (நாம் சொல்லவில்லை அவரே சொன்னது). அந்த கதாபாத்திரத்திலிருந்து மீள அவரால் எளிதில் முடியவில்லையாம் (இவர்களெல்லாம் சைக்கோ கொலைகாரனாக நடித்தால் நாடு என்னாவது?). பிறகு ஒருவழியாக நார்மலாகி திருடன் போலீஸ் படத்தில் நடித்தாராம்.
 
இந்தப் படத்தை ஜே.செல்வகுமாருடன் இணைந்து எஸ்.பி.பி.சரண் தயாரித்து வருகிறார். இவர் தயாரித்த சென்னை 28, ஆரண்யகாண்டம் படங்கள் தமிழின் மிக முக்கியமான படங்கள். அதனால் திருடன் போலீஸ் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தினேஷ் இந்தப் படத்துக்காக எடையைக் கூட்டி தொப்பையும் வளர்த்திருக்கிறார்.
 
நாயகி ஐஸ்வர்யா. போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகளாக நடித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் இளம் மாடர்ன் பெண். வழக்கமாக அவர் நடிக்கும் கிராமத்து வேடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கார்த்திக் என்பவர் படத்தை இயக்கியுள்ளார்.
 
யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை அடுத்த மாத இறுதியில் வெளியிடுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்