கௌரவ டாக்டர் பட்டம் நிகழ்வு

திங்கள், 25 மே 2015 (14:36 IST)
அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இயங்கிவரும் சர்வதேச அப்போஸ்தல பல்கலைக்கழகம் கல்வி, கலாச்சாரம், இயற்கைவளம், சமூக மேம்பாடு மற்றும் எழுத்துப் பணியில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு டாக்டர் பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தி வருகிறது.

இவ்வாண்டு பாடலாசிரியர் பிரியன், பாடலாசிரியர் அண்ணாமலை, வனத்துறை அதிகாரி கொளஞ்சியப்பா, எழுத்தாளர் சிவன் ஆகியோர் டாக்டர் பட்டம் பெறத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
 

பாடலாசிரியர் பிரியன் அவர்களுக்கு உலக அளவில் முதல்முறையாக பாடல் எழுதக் கற்றுத் தரும், பாடலாசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தமிழ்த் திரைப்பாக்கூடம் எனும் கல்வி நிறுவனம், அதற்கான பாடத்திட்டம் மற்றும் பாடல் ஆய்வு நூல்களை படைத்தமைக்காக இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

பாடலாசிரியர் அண்ணாமலை அவர்களுக்கு இருபதாண்டு கால பத்திரிக்கைப் பணி மற்றும் சிற்றிதழ்கள் குறித்த ஆய்வுக்காக இலக்கியத்திற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

வனத்துறை அதிகாரி கொளஞ்சியப்பா அவர்களுக்கு முப்பதாண்டு கால இயற்கைவள மேம்பாடு மற்றும் வனப்பாதுகாப்பிற்காக சமூகமேம்பாட்டிற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. எழுத்தாளர் சிவன் அவர்களுக்கு நூற்றைம்பதிற்க்கும் மேலான நூல்கள் படைத்தமைக்காக சமூகமேம்பாட்டிற்கான டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வு சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் 23.05.2015 அன்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது. பிரதம பேராயர் எஸ்.எம்.ஜெயக்குமார் அவர்கள் தலைமையேற்று பட்டங்கள் வழங்கி வாழ்த்தினார். கலைமாமணி செவாலியர் டாக்டர்.வி.ஜி.சந்தோசம் மற்றும் மாண்புமிகு நீதியரசர் ஞானப்பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கத்தலைவர் திரு.பி.கே.இளமாறன் வாழ்த்துரை வழங்கினார்.

பாடலாசிரியர் பிரியன் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் சார்பாக நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்வு முடிவில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வெப்துனியாவைப் படிக்கவும்