விமர்சனத்துக்கு அஞ்சிய அஞ்சான் - தள்ளி வைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் காட்சி

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2014 (13:38 IST)
15 ஆம் தேதி மதியத்துக்கு மேல் 3 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அஞ்சான் படத்தின் பத்திரிகையாளர் காட்சி ரத்து செய்யப்பட்டு இரண்டு தினங்கள் தள்ளி வைக்கப்பட்டது.
 
கடந்த 15 ஆம் தேதி அஞ்சான், கதை திரைக்கதை வசனம் இயக்கம் என இரு படங்கள் வெளியாயின. முன்பு படம் வெளியாவதற்கு முன்பே பிரஸ்ஷோ எனப்படும் பத்திரிகையாளர்களுக்கான காட்சி நடத்தப்படும். இணையம் வந்த பிறகு படம் பார்த்த அரை மணியில் விமர்சனம் இணையத்தில் ஏற்றப்பட்டு உலகம் முழுவதும் உள்ளவர்களை எட்டிவிடும் என்பதால் படம் வெளியாகிற அன்றே இப்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு படத்தை திரையிடுகின்றனர்.
 
பார்த்திபன் தனது கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தின் பத்திரிகையாளர் காட்சியை 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் காலை ஒன்பது மணிக்கு அஞ்சான் படத்தின் பிரஸ்ஷோ வைத்திருப்பதாக தகவல் வந்தது. ஒன்பது மணிக்கு அஞ்சானை பார்த்துவிட்டு எப்படி 12 மணிக்கு பார்த்திபன் படத்துக்கு செல்வது?
 
அதனால் அஞ்சானின் பிரஸ்ஷோவை மதியத்துக்கு மேல் 3 மணிக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்தக் காட்சி கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டு, இரண்டு நாள் கழித்து (இன்று) ஞாயிற்றுக்கிழமைக்கு மாற்றி வைக்கப்பட்டது.
 
பல திரையரங்குகளில் 15 ஆம் தேதி காலை 7 மணிக்கே அஞ்சான் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. 12 மணிக்கெல்லாம் இணையத்தில் படத்தின் விமர்சனங்கள் வெளியாயின. ஒருவர் பாக்கியில்லாமல் அனைவரும் படத்தை கழுவி ஊற்ற, அதிர்ந்து போனது அஞ்சான் டீம். இந்நிலையில் பத்திரிகையாளர்களுக்கு முதல் நாளே படத்தை திரையிட்டால் அவர்களும் தங்கள் பங்குக்கு கழுவி துடைப்பார்கள் என்ற அச்சத்தில்தான் பிரஸ் ஷோவை இரண்டு தினங்கள் தள்ளி வைத்தனர்.
 
படத்தின் டீஸரை சில லட்சம் பேர் பார்த்தார்கள் என்பதற்கே சக்சஸ் மீட் நடத்தி கேக் வெட்டி வெறுப்பேற்றிவர்களாயிற்றே... அஞ்சானுக்கும் கொஞ்சம் அச்சம் இருப்பது நல்லதுதான்.

வெப்துனியாவைப் படிக்கவும்