பஞ்சு அருணாசலம் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (09:22 IST)
தமிழ் திரை ஆளுமை பஞ்சு அருணாசலத்தின் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது...


 
 
"தமிழ்த்திரையுலகில் தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி தன் ஆளுமையால் பலவேறு படைப்புகளையும், பல கலைஞர்களையும் உருவாக்கியவர் பஞ்சு அருணாச்சலம். அந்த சாதனை மனிதரின் திடீர் மறைவு திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
1958 -​ல் காரைக்குடி, கூடல்பட்டியிலிருந்து சினிமா கனவோடு சென்னை வந்தவர் பஞ்சு அவர்கள். தன்னுடைய உறவினரான கவிஞர் கண்ணதாசன் அவர்களிடம் பாடல் எழுத உதவியாளராக சேர்ந்து, ​பாடல் எழுதும் நுட்பத்தையும் கதை, திரைக்கதை வசனம் எழுதும் நுட்பத்தையும் திறம்படக் கற்றுக்கொண்டார்.
 
தன்னுடைய முதல் பாடலான சாரதா படத்தில் மணமகளே மருமகளே வா வா. என்ற பாடலின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். இப்போதும் திருமண வீடுகளில் காலத்தால் அழிக்க முடியாத காவியப்பாடலாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதே போல 400-க்கும் அதிகமான ​பாடல்களை தமிழ் திரையுலகுக்கு தந்திருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.
 
குறிப்பாக கலங்கரை விளக்கம் படத்தில் எம்.ஜி.ஆர்.அவர்களுக்கு எழுதிய பொன்னெழில் பூத்தது புது வானில், ரஜினி நடித்த ஆறிலிருந்து அறுபதுவரை படத்தில் கண்மணியே காதல் என்பது கற்பனையோ, கல்யாண ராமன் படத்தில் மலர்களில் ஆடும் இளமை புதுமையே போன்ற பாடல்கள் மனதை விட்டு இன்றும், என்றும் ​நீங்காத பாடல்கள் தான். ​
 
கதை, திரைக்கதை, வசனம், பாடல், இயக்கம், பட வினியோகம், தயாரிப்பு என்று சினிமாவில் எல்லா துறைகளிலும் தன்னுடைய முத்திரையை பதித்த பஞ்சு அவர்களின் மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு.
 
அதோடு இசைஞானி இளையராஜாவை அன்னக்கிளி படத்தின் மூலம் அறிமுகம் செய்த ​​மாபெரும் மனிதர். ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரின் வெற்றிகளில் பெரும் பங்கு வகித்தவர். இத்தகையை பெருமைகளை உடைய பஞ்சு அருணாச்சலம் அவர்களின் ஆன்மா சாந்தியடையவும்இ, அவரை பிரிந்து வாடும் அவரது​ குடும்பத்திற்கு ஆறுதல் கிடைக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறது."

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்