ரஜினி அரசியலுக்கு வரணும், இல்லைன்னா.... ரசிகர்களின் செல்ல மிரட்டல்

ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (09:41 IST)
விடாது கருப்பு மாதிரியாகிவிட்டது ரஜினி ரசிகர்களின் அரசியல் ஆசை. அவர் நாடாளுகிறாரோ இல்லையோ, நாம, வட்டம் மாவட்டம் என்று பதவிகளில் கலக்க வேண்டும் என்ற ஆசை பெரும்பாலான ரசிகர்களுக்கு இருக்கிறது. போஸ்டர் ஒட்டி பட்டாசு வெடித்து பாலாபிஷேகம் செய்ததுக்கு ஒரு பலன் வேண்டாமா?
ரஜினிகாந்த் ரசிகர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இக்கூட்டத்துக்கு ரஜினி இளைஞர் பேரவை மாநில தலைவர் பாரப்பட்டி கே.கனகராஜ் தலைமை தாங்கினார். ஆடிட்டர் ஆர். சீனிவாச பெருமாள் முன்னிலை வகித்தார்.
 
தமிழ்நாடு ரஜினிகாந்த் பட்டதாரிகள் பேரவை, இளைஞர் பேரவை, மருத்துவர் பேரவை, மகளிர் பிரிவு நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு்– 
 
ரஜினி நேரடி அரசியலுக்கு வந்தால் நாட்டில் நேர்மையான ஆட்சி, ஊழலற்ற நிர்வாகம் நடக்கும் என்று அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே மக்கள் நலன் கருதி ரஜினி அரசியலுக்கு வரவேண்டும். 1996–ல் ரசிகர்களை அரசியலில் ஈடுபட வைத்து தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை ரஜினி ஏற்படுத்தினார். தொடர்ந்து தமிழகத்தில் நல்லாட்சி மலர காலத்திற்கேற்ப ரசிகர்களை பிரதிபலன் பாராமல் பயன்படுத்தினார். இதனால் ரசிகர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே சுமூக உறவு பாதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலைமை மாற வேண்டும். ரஜினி அரசியலில் ஈடுபட ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கோவில்களில் வழிபாடுகள் நடத்தி உள்ளோம். ரசிகர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது பாராட்டோ பதவியோ அல்ல. தாங்கள் நேரடி அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய விருப்பம் உள்ளதா இல்லையா என்பதை ரசிகர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். 
 
தங்களுடைய அரசியல் சம்பந்தப்பட்ட அறிவிப்பு எதுவாக இருந்தாலும் ஏற்போம். இனி வாழ்வோ அல்லது சாவோ உங்களோடுதான். ரஜினி நேரடி அரசியலுக்கு விரைவில் வருவதற்காக ரசிகர்கள் அறவழியில் மிகப் பெரிய உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவது என இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது. உண்ணாவிரத போராட்ட தேதி விரைவில் அறிவிக்கப்படும். 
 
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

வெப்துனியாவைப் படிக்கவும்