அம்மா தெய்வம் என்ற கார்த்திக் மீது புகார் தந்த அம்மா

சனி, 1 நவம்பர் 2014 (11:00 IST)
கார்த்திக் குடும்பத்தில் சொத்துப் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. தனது அண்ணன் கணேசன் அம்மாவை ஏமாற்றி தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை அபகரித்து கொண்டார் என்பது கார்த்திக்கின் குற்றச்சாட்டு. தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இது குறித்து அவர் புகாரும் செய்தார்.
 
பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கார்த்திக், தனது அண்ணன் என்று சொல்லிக் கொள்கிறவர் தனது அம்மாவை ஏமாற்றி சொத்துக்களை தனது பெயரில் உயில் எழுதிக் கொண்டதாகவும், பாவம் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. இந்த விஷயத்தில் அம்மாவை குற்றம் சொல்ல முடியாது, அவர்கள் தெய்வம். இப்போதும் எப்போதும் தெய்வம் என்றார்.
 
இந்நிலையில் கார்த்திக்கின் அம்மா சுலோச்சனாவே தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் கார்த்திக் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். 
 
எனது இளைய மகன் கார்த்திக் கொடுத்த புகார் மனு தவறானது. எனது பெயரில் சென்னை ஆழ்வார்பேட்டை, சி.பி. ராமசாமி ரோட்டில் சொத்துக்கள் இருந்தது. அந்த சொத்துக்களை நான்தான் எனது மூத்தமகன் கணேசன் பெயருக்கு எழுதி கொடுத்தேன். 
 
என்னை ஏமாற்றி அந்த சொத்துக்களை எனது மூத்த மகன் எழுதி வாங்கிக் கொண்டதாக கார்த்திக் கூறிய புகாரில் உண்மை இல்லை. அந்த சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்று கார்த்திக்கும், அவரது அடியாட்களும் என்னையும், எனது மூத்த மகன் கணேசனையும் மிரட்டுகிறார்கள். எனவே எனக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பதோடு, கார்த்திக் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
இரு தரப்பும் பரஸ்பரம் ஏமாற்றுதல், கொலை மிரட்டல் என்று புகார் தந்துள்ளதால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்