பழம்பெரும் ஒளிப்பதிவாளர் வின்சென்ட் மரணம் - ஜெயலலிதா இரங்கல்

வியாழன், 26 பிப்ரவரி 2015 (09:53 IST)
பழம்பெரும் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வின்சென்ட் மறைவுக்கு ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். வின்சென்ட் அடிமைப்பெண், எங்க வீட்டு பிள்ளை, கௌரவம், வசந்தமாளிகை, காதலிக்க நேரமில்லை உள்பட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 30 -க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். 
 
ஜெயலலிதாவின் இரங்கற் செய்தி வருமாறு -
 
பழம்பெரும் திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஏ.வின்சென்ட் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 86-வது வயதில் இன்று (25.2.2015) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரம் அடைந்தேன். 
 
தமிழில் “அமரதீபம்” என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய வின்சென்ட் அவர்கள் தொடர்ந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடித்த “எங்க வீட்டுப் பிள்ளை”, நான் நடித்த “சவாலே சமாளி”, “திருமாங்கல்யம்” உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், பல படங்களை இயக்கி திரைப்படத் துறையில் தனக்கென தனி இடம் பிடித்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் திரைப்பட ஒளிப்பதிவாளராக சிறப்பாக பணியாற்றியுள்ளார். இவர் இந்தியத் திரைப்படத் துறையில் மிகவும் திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் என்றால் அது மிகையாகாது.
 
எளிமையானவரும், அனைவருடனும் அன்பாகப் பழகும் பண்பையும் கொண்டவருமான வின்சென்டின் இழப்பு திரைப்படத் துறைக்கும், கலைத் துறைக்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
 
இவ்வாறு ஜெயலலிதா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்