பிரபல இயக்குனர் அமீர் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வைத்த குற்றச்சாட்டிற்கு எதிராக பலரும் ஞானவேல்ராஜாவை கண்டித்து வரும் நிலையில் இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.
 
									
				
	
சமீபத்தில் நடந்த கார்த்தியின் 25வது பட விழாவுக்கு அவரை திரையுலகில் பருத்தி வீரன் படம் மூலமாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அமீர் அழைக்கப்படாதது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அமீர் குறித்தும், அவர் பண மோசடி செய்ததாகவும் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
									
				அமீர் பருத்தி வீரன் படத்திற்காக எவ்வளவு பாடுபட்டார் என இயக்குனர் சசிக்குமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் பேசியுள்ளதோடு தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த பருத்தி வீரன் படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்தவர் பொன்வண்ணன்.
 
									
				
	
அவர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் “பருத்திவீரன் 2ம் கட்ட படப்பிடிப்புகள் தொடங்கியபோது அமீர் அவர்கள் பொறுப்பேற்று பல நண்பர்கள் மூலமாக கடன் வாங்கி படப்பிடிப்புக்கான செலவுகளை செய்தார் என்பதை நான் அறிவேன். நானும், சமுத்திரக்கனியும் செலவுகளை சுட்டிக்காட்டி பேசியபோதெல்லாம் சமாதானப்படுத்திவிட்டு சமரசம் செய்து கொள்ளாமல் வேலை பார்த்தார். பணத்துக்காக தனது படைப்பிற்கு துரோகம் செய்பவரல்ல அமீர். இதை அவருடன் தொடர்ந்து பயணித்தவன் என்ற முறையில் உறுதியாக சொல்ல முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
 
									
				மேலும் “உலகமே அங்கீகரித்த படைப்பையும், அதன் படைப்பாளியையும் தனிப்பட்ட காரணங்களுக்காக திருடன், வேலை தெரியாவர் என கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல! அந்த ஊடக பேட்டி முழுக்க உங்கள் உடல்மொழியும், பேச்சுத்திமிரும் வக்கிரமாக இருந்தது. தங்கள் தயாரிப்பில் வந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை போன்று அளவுகோலாக வைத்து பருத்துவீரனையும், அதன் படைப்பாளியையும் எடைப்போட்டு விட்டீர்களோ.. வேண்டாம் இந்த தரம் தாழுந்த மனநிலை” என்று தெரிவித்துள்ளார்.