வெளிவருமா இசைப்பிரியாவின் கதையைச் சொல்லும் போர்க்களத்தில் ஒரு பூ?

சனி, 31 மே 2014 (14:37 IST)
ஈழம் குறித்து எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும் ஈழத்தமிழர்களின் உணர்வுகளை காசாக்கும் முயற்சியாகவே இருந்துள்ளது. காசு பார்ப்பதுடன் ஈழத்தமிழர்களையும், அவர்களின் விடுதலைப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் முயற்சியும் இதில் அடங்கும்.
 
ஈழப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் படங்களை குதூகலத்துடன் அனுமதிக்கும் சென்சார் ஈழத்தமிழர்களின் வேதனைகளைச் சொல்லும் படங்களை கறாராக தவிர்த்து விடுகிறது. சென்சாரின் கத்திரிக்கோலுக்கு தப்பித்து ஈழம் குறித்த நேர்மையான படத்தை எடுப்பது இன்றைய தேதியில் கடினம்.
இப்படியொரு சூழலில் ஈழம் குறித்த படங்களை எடுக்காமலிருப்பதே உத்தமம். அரைகுறை புரிதலுடன் எடுக்கப்பட்டு சென்சாரில் குதறப்பட்டு குறைபிரசவங்களாக வெளிவரும் அனைத்துப் படங்களும் ஏதோ ஒருவகையில் ஈழத்துக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.
 
ஆனால் யார் இதை காதில் வாங்குவது?
 
பல கன்னட படங்களை இயக்கியுள்ள கு.கணேசன் என்பவர் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை போர்க்களத்தில் ஒரு பூ என்ற பெயரில் எடுத்து வருகிறார். இளையராஜாதான் இசை. இசைப்பிரியாவின் வாழ்க்கையையும் அவர் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதையும் அப்பட்டமாக காட்சிப்படுத்தினால் சென்சார் எப்படி எதிர்வினையாற்றும் என்பது தெரியாததல்ல. தெரிந்தும் ஏன் இந்தப் படம் எடுக்கப்படுகிறது என்பதுதான் விடை தெரியாத கேள்வி.

வெப்துனியாவைப் படிக்கவும்