விளம்பரங்களில் விஜய் முகம் மறைப்பு - தேர்தல் கமிஷன் கறார்

திங்கள், 21 ஏப்ரல் 2014 (19:47 IST)
விளம்பரங்களில் உள்ள விஜய்யின் முகத்தை மறைக்கும்படி தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதால் கோவை மாநகரில் வைக்கப்பட்டிருந்த நகைக்கடை ஒன்றின் அனைத்து விளம்பரப்பலகைகளிலும் விஜய்யின் முகம் மட்டும் மறைக்கப்பட்டது.
 
தேர்தல் கமிஷனின் பல நடவடிக்கைகள் சபாஷ் போட வைக்கின்றன. அதேநேரம் சில நடவடிக்கைகளைப் பார்த்தால் தேவையா இதெல்லாம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.
 
விஜய் கோவையில் நரேந்திர மோடியை சந்தித்தைத் தொடர்ந்து, விஜய்யின் பாஜக ஆதரவு வெளிப்படையாக அனைவருக்கும் தெரிய வந்தது. அதன் காரணமாக விஜய் இடம்பெறும் விளம்பரப்பலகையில் அவரது முகத்தை மறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து, அது நடைமுறையும் படுத்தப்பட்டது. 

அரசுக்கு சொந்தமான பேருந்துகளிலும், தண்ணீர் பாட்டில்களிலும் இரட்டை இலையையும், ஜெயலலிதாவின் படத்தையும் மறைக்கச் சொன்னதில் நியாயம் உள்ளது. அவை அரசுக்கு அதாவது மக்களுக்கு உரிமை உள்ளவை. ஆனால் தனியார் விளம்பரம் அப்படி அல்லவே. 
 
விஜய் டொகோமோ விளம்பரங்களிலும் வருகிறார். அந்தப் படங்கள் சென்னை மாநகர் முழுவதும் வைக்கப்பட்டுள்ளது. அதையும் அகற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிடுமா? ஓட்டுச் சாவடிக்கு அருகில் உள்ள விளம்பரங்களை மட்டும் மறைக்க சொல்லியிருந்தால்கூட அதில் நியாயமிருக்கிறது. 
 
விஜய் ஓட்டுப்போடவாவது சொந்த முகத்துடன் அனுமதிப்பார்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்