வர்மா வர்றார் ஒளிஞ்சுக்கோ...

புதன், 30 ஜூலை 2014 (20:24 IST)
மிரட்டல் படங்களை எடுத்த ராம் கோபால் வர்மா படம் எடுத்து ரசிகர்களை மிரட்ட ஆரம்பித்துள்ளார். முடிந்தால் வாரத்துக்கு ஒரு படம் எடுப்பேன் என்ற அவரது அதீதி சினிமா ஆசைதான் அனைத்துக்கும் பிள்ளையார் சுழி.
 
இந்தியில் தொடர்ந்து தோல்விகளை தந்த வர்மா அங்குள்ள மீடியாக்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள் என்று அனைவரையும் பகைத்துவிட்டு ஆந்திராவுக்கு வந்தார். சில மாதங்களில் மூன்று படங்கள். அதில் கடைசியாக வெளிவந்த ஐஸ்க்ரீம் படத்தை சில தினங்களில் எடுத்ததாக கேள்வி.
வர்மாவின் படங்கள் பயங்கரமாக மாறியதுக்கு அவரது பரிசோதனை கேமரா கோணங்கள்தான் பிரதான காரணம். ஐஸ்கிரீம் படத்தையும் அப்படியொரு சோதனை முயற்சியாகதான் எடுத்தார். இதில் அவர் பயன்படுத்தியது flow cam  என்ற தொழில்நுட்பம். கேமராவை ரிமோட்டில் இயக்கக் கூடிய சின்ன மவுண்டிங்கில் இணைத்து எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஸ்டெடிகேமை ரிமோட்டில் ஆளில்லாமல் இயக்கினால் எப்படி இருக்கும்? கிட்டத்தட்ட அதேதான்.
 
ஐஸ்கிரீம் படத்தில் லைட்டிங் உள்பட எதுவுமில்லை. படமாக்க வேண்டியது. கம்ப்யூட்டரில் கரெக்ஷன் செய்ய வேண்டியது. கேமராவையும் வைத்து பறக்க வேண்டும் என்பதால் எடை குறைவான கேமராவை மட்டுமே இதில் பயன்படுத்த முடியும். படத்தின் காட்சி குவாலிட்டி கொஞ்சம் குறைவாகவே இருக்கும்.
 
ஐஸ்கிரீம் படத்துக்கு வீடு ஒன்றை வாடகை எடுத்தது தவிர எந்தச் செலவும் இல்லை. இரண்டு லட்சத்துக்குள் படத்தை எடுத்ததாக வர்மா கூறினார். படம் வெளியான உடனேயே இந்தியில் எக்ஸ் என்ற செக்ஸ் பற்றிய படம் எடுக்கப் போய்விட்டார். அப்படியே ஐஸ்கிரீம் இரண்டாம் பாகத்துக்கான பிள்ளையார் சுழியையும் போட்டிருக்கிறார். பர்ஸ்ட்லுக் இப்போதே தயார்.
 
சொன்னது போல் வாரத்துக்கு ஒரு படம் எடுத்து நம்மை பனிஷ் செய்வாரோ? ஓ காட்.

வெப்துனியாவைப் படிக்கவும்