லோக்கல் திருடனாக ஸ்ரீகாந்த் நடிக்கும் சாமியாட்டம்

சனி, 14 ஜூன் 2014 (13:55 IST)
நெஞ்சைப் பிழியும் காட்சிகள் இல்லாமல் ரத்தம் சொட்டும் வன்முறை இல்லாமல் பதைபதைக்கும் பயமுறுத்தல் இல்லாமல் ஒரு படம் உருவாகிறது. அதுதான் சாமியாட்டம்.
 
இலகுவான கதை, மிருதுவான காட்சிகள் வேடிக்கையான சம்பவங்கள், கேலி, கிண்டல் என ஜாலி பேச்சுகள், விறுவிறுப்பான திரைக்கதை என ஜாலி வேடிக்கை வினோதப் படமாக சாமியாட்டம் உருவாகிறது.
நடிகர் ஸ்ரீகாந்தின் சொந்தப் பட நிறுவனமான் கோல்டன் ப்ரைடே பிலிம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே இந்நிறுவனம் தயாரித்து வெளியிடும் நிலையில் நம்பியார் படம் இருக்கிறது. இது இரண்டாவது படம்.
     
மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்குகிறார். தனுஷின் ஆஸ்தான இயக்குநராக அறியப்பட்ட இவர், தனுஷை வைத்து எடுத்த யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமப் புத்திரன் படங்களை அடுத்து நான்காவதாக ஸ்ரீகாந்த் நடிக்கும் சாமியாட்டம் படத்தை இயக்குகிறார்.
 
தெலுங்கில் பெரிய வெற்றி பெற்று வணிக ரீதியாக வசூல்செய்த படமான சுவாமி ரா ரா படத்தின் உரிமை வாங்கி தமிழில் உருவாக்கி வருகிறார்.
 
களவு போகும் தொன்மையான பிள்ளையார் சிலை பலரிடம் கை மாறி பல சுவாரஸ்யப் பயணங்களை மேற்கொள்கிறது. அந்த பயணம் சார்ந்த காமெடி கலாட்டாதான் படக் கதை.
 
கதை காணாமல் போன பிள்ளையாரின் கோணத்தில் , பார்வையில் சொல்லப்படும் விதம் தனி சுவை. ‘It is a Fun Film' என்கிறார் இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர்.
 
படத்தின் கதை வெகு எளிமையானது. சொல்லும் விதத்தால் அது ரசிக்க வைக்கும்படி வேடிக்கையாகியிருக்கிறது.
 
ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கிறார். மும்பை பெண் ஒருவர் நாயகி. எஸ்.எஸ்.மியூசிக் பூஜா, முருகதாஸ், சம்பத், தெலுங்கு நடிகர் ஜீவா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கியமான 'திடுக்' வேடத்தில் பவர் ஸ்டார் வருகிறார்.
 
ஸ்ரீகாந்த், பூஜா, முருகதாஸ் மூவரும் கூட்டுக் களவாணிகள். இவர்கள் சேர்ந்தே திருடுவது வழக்கம். இவர்கள் கையில் திருட்டுப் போன தொன்மையான பிள்ளையார் சிலை கிடைக்க அந்த சாமிபடுத்தும் பாடு அடக்க முடியாத சிரிப்பு வெடி காட்சிகளாகின்றன.
 
சென்னை, பாண்டிச்சேரியில் தான் படப்பிடிப்பு நடக்கிறது. 10 நாட்கள் முடிந்து அடுத்த பயணத்திட்டத்துக்கு தயாராகவுள்ளனர் படக்குழுவினர்.
 
படத்துக்கு ஒளிப்பதிவு -  கோபி ஜெகதீஸ்வரன். இசை ஷ்வரன். சுமார் 400 விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். இது இவரது முதல் படம். 5 பாடல்கள் இதில் உள்ளன. விவேகா உள்பட சில கவிஞர்கள் எழுதுகின்றனர்
 
படத்தொகுப்பு - தியாகராஜன், ஸ்டண்ட் - ஹரி, தளபதி தினேஷ்
 
குறுகிய காலத் தயாரிப்பாக சரமாரியாக ஜாலி.......சந்தோஷத்துக்கில்லை வேலி.....என்கிற கொள்கையுடன் உருவாகி வருகிறது ‘சாமியாட்டம்'.
 

வெப்துனியாவைப் படிக்கவும்