ரஜினியை மனம்விட்டு சிரிக்க வைத்த முண்டாசுப்பட்டி

திங்கள், 16 ஜூன் 2014 (11:21 IST)
சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்துள்ள முண்டாசுப்பட்டி தன்னை கவர்ந்ததாகவும், பல இடங்களில் மனம்விட்டு சிரிக்க வைத்ததாகவும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
ராம்குமார் இயக்கியிருக்கும் முண்டாசுப்பட்டி எண்பதுகளில் நடக்கும் கதை. முண்டாசுப்பட்டி என்ற கற்பனை கிராமத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டால் இறந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கை நிலவுகிறது. அந்த கிராமத்துக்கு வரும் புகைப்பட கலைஞனான ஹீரோ எடுக்கும் புகைப்படத்தால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் பிறகு நடப்பதை நகைச்சுவையாக கூறியிருக்கிறார்கள்.
முண்டாசுப்பட்டி சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. படத்தை பார்க்க விரும்புவதாக ரஜினி சொன்னதையடுத்து அவருக்கு படம் ஸ்பெஷலாக திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த ரஜினி, ஹீரோவாக நடித்த விஷ்ணு விஷால் மற்றும் காளி உள்பட நடிகர்களையும், இயக்குனரையும், தொழில்நுட்ப டீமையும் பாராட்டினார். பல இடங்களில் மனம்விட்டு சிரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
 
ஹீரோ விஷ்ணு விஷாலின் தந்தை ரஜினியின் நட்பு வட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்