மோகன்லால் சிறந்த நடிகர் - கமல்

சனி, 2 மே 2009 (13:50 IST)
தனது நீண்ட நாள் கோபத்துக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் கமல்ஹாசன். யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது உன்னைப்போல் ஒருவன் படத்தைப் பற்றி அவர் நீண்ட பேட்டியளித்தது பத்திரிகையாளர்களுக்கே சின்ன ஷாக்!

தமிழ் ஊடகங்கள் மீது கமலுக்கு நீண்ட நாட்களாகவே கோபம். பிரமாண்டமாக தயாரான தசாவதாரம் படத்தைப் பற்றிகூட பத்திரிகைகளுக்கு அவர் பேட்டி தரவில்லை. முன்னணி பத்திரிகைகளுக்கே கதவடைப்பு என்ற நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி கூறத் தேவையில்லை. அது நடந்து நெடுங்காலமாகிறது.

இந்நிலையில் உன்னைப் போல் ஒருவன் இயக்குனர் சக்ரி, நடிகர் மோகன்லால், படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதி, வசனகர்த்தா இரா.முருகன், பாடலாசிரியர் மனுஷ்யபுத்ரன் சகிதம் நேற்று கமல் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்தி தி வெட்னெஸ்டே படத்தி‌ன் தழுவலே உன்னைப்போல் ஒருவன். தெலுங்கில் இந்தப் படம் கமல், வெங்கடேஷ் நடிப்பில் ஈநாடு என்ற பெயரில் தயாராகிறது. தி வெட்னெஸ்டேயை அப்படியே எடுக்காமல் தமிழ்நாட்டின் அரசியல் சூழலுக்கு ஏற்ப மாற்றி எடுப்பதாக கமல் தெரிவித்தார்.

மோகன்லால் படத்தில் நடிப்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர், மோகன்லால் சிறந்த நடிகர். அவரைப் போல ஒரு கலைஞர் கிடைப்பது அரிது என்றார்.

ஸ்ருதி கமல் இந்தப் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அதேபோல் எழுத்தாளர் இரா.முருகன் வசனகர்த்தாவாகவும், கவிஞர் மனுஷ்யபுத்ரன் பாடலாசிரியராகவும் அறிமுகமாகிறார்கள். கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ­னல்சும், யு டிவியும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

இந்த மாதம் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும். ஆனாலும் ஆகஸ்டு 12 ஆம் தேதியே படம் திரைக்கு வருகிறது. அன்றுதான் கமல் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா 50 வருடங்களுக்குமுன் வெளியானது.

இந்த பொன்விழாவை பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார்கள் கமல் ரசிகர்கள். அவர்களின் ஆசைப்படி உன்னைப்போல் ஒருவனை ஆகஸ்டு 12 ஆம் தேதி வெளியிடுகிறார் கமல்.

இலங்கை தமிழர் பிரச்சனை குறித்தும் கமலிடம் கேட்கப்பட்டது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். ஈழப் பிரச்சனையை பற்றி படம் எடுக்கும் எண்ணம் இருக்கிறது, ஆனால், தைரியம்தான் இல்லை என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்