மீண்டும் தள்ளிப் போனது ஜிகர்தண்டா - ஒரு மோதல் ஒரு விளக்கம் மற்றும் புதிய ரிலீஸ் தேதி

செவ்வாய், 22 ஜூலை 2014 (19:08 IST)
ஜூலை 25 வெளியாவதாக இருந்த ஜிகர்தண்டா மீண்டும் தள்ளிப் போனது. தயாரிப்பாளரின் இந்த திடீர் முடிவு படத்தின் நாயகன் சித்தார்த் உள்பட அனைவரையும் கொதிப்படைய வைத்துள்ளது.
 
ஜிகர்தண்டா படம் எப்போதோ வெளியாகியிருக்க வேண்டும். ஆனால் தயாரிப்பாளர் கதிரேசன் பட வெளியீட்டை தள்ளிப் போட்டு வந்தார். அருமையாக தயாராகியிருக்கும் ஒரு படத்தை - அதுவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு படத்தை அதன் தயாரிப்பாளரே ஏன் தள்ளிப் போட வேண்டும் என்று அனைவரும் அதிசயப்பட்டனர்.
ஜிகர்தண்டா மதுரை பின்னணியில் தயாராகியிருக்கும் கேங்ஸ்டர் படம். படத்தின் சில காட்சிகளுக்கு சென்சார் ஆட்சேபம் தெரிவித்தது. அந்தக் காட்சிகளை நீக்கினால் மட்டுமே யு சான்றிதழ் தர முடியும் என்றனர். ஆனால் காட்சிகளை நீக்குவதில்லை என்பதில் உறுதியாக இருந்தார் படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பாராஜ். அதனால் படத்துக்கு யுஏ சான்றிதழே கிடைத்தது. 
 
யுஏ கிடைத்தால் வரி விலக்கு கிடைக்காது (இப்போது எந்தப் படத்துக்கும் வரி விலக்கு கிடையாது என்பது ஒருபுறம்). யுஏ படத்தை தொலைக்காட்சியிலும் ஒளிப்பரப்ப முடியாது. தொலைக்காட்சியில் ஒளிப்பரப்ப மீண்டும் தணிக்கை செய்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். இதுதவிர படத்தின் நீளமும் அதிகம். இந்தக் காரணங்களால் தயாரிப்பாளர் படத்தின் காட்சிகளை கத்தரிக்க வற்புறுத்தியுள்ளார். இயக்குனர் மறுத்திருக்கிறார். இதுதான் அவர்களுக்கிடையில் உள்ள லடாய் என்கிறார்கள்.
 

ஒருவழியாக ஜூலை 25 படத்தை வெளியிடுவதாக அறிவித்து திரையரங்குகளின் பட்டியலுடன் விளம்பரங்களும் வந்தன. இந்நிலையில் படம் 25 ஆம் தேதி வெளிவராது என தயாரிப்பாளர் கதிரேசன் பிற தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளார். ஆனால் படத்தின் நாயகனுக்கோ, இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜுக்கோ இந்த தேதி மாற்றம் குறித்து அவர் கூறவில்லை. கடுப்பான சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தயாரிப்பாளரை காய்ச்சி எடுத்தார். கடவுள்தான் ஜிகர்தண்டாவை காப்பாற்ற வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் கதிரேசனிடமிருந்து அறிக்கை ஒன்று வெளிவந்துள்ளது. வேலையில்லா பட்டதாரி நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாகவும், 25 ஆம் தேதி ஜிகர்தண்டாவை வெளியிட்டால் அதற்கு திரையரங்கு ஒதுக்க வேண்டியிருக்கும் எனவும், வேலையில்லா பட்டதாரிக்கு பின்னடைவாக அது அமையும் எனவும் விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் கேட்டுக் கொண்டதால் படத்தை 25 வெளியிடுவதற்குப் பதில் ஆகஸ்ட் 1 ரிலீஸ் செய்வதாக அதில் கூறியுள்ளார்.
 
கதிரேசனை தயாரிப்பாளராக உயர்த்தியவர் தனுஷ். அவரது பொல்லாதவன் படத்தின் மூலம்தான் கதிரேசன் தயாரிப்பாளரானார். தொடர்ந்து அவரது ஆடுகளம் படத்தையும் கதிரேசன் தயாரித்தார். அதற்கான நன்றிக்கடன்தான் இந்த தேதி மாற்றம் என்கிறார்கள்.
 
ஆகஸ்ட் ஒன்றாம் தேதி பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் படமும், சி.வி.குமாரின் சரபம் படமும் திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்