மலர் கொத்துகள் வேண்டாம் - மணமக்கள் அமலா பால், விஜய் வேண்டுகோள்

செவ்வாய், 3 ஜூன் 2014 (14:26 IST)
எங்கள் திருமணத்துக்கு வருகிறவர்கள் மலர் கொத்துகளோ, பரிசுப் பொருள்களோ, அன்பளிப்புகளோ தர வேண்டாம் என விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகும் அமலா பால், இயக்குனர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மலையாள இயக்குனர் ஆஷிக் அபுவும், நடிகை ரீமா கல்லிங்கலும் தங்களின் திருமணத்தை திருமண பதிவு அலுவலகத்தில் எளிமையாக நடத்தினர். ஆடம்பர திருமணத்துக்கு ஆகும் செலவை இதன் மூலம் குறைத்தவர்கள் அந்தத் தொகையை - ரூபாய் 10 லட்சம் - கேன்சரால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மருத்துவச் செலவுக்கு அளித்தனர். ஆடம்பர செலவை குறைத்து அவர்கள் அளித்த உதவி அனைவராலும் பாராட்டப்பட்டது.
 
நடிகை அமலா பாலும், இயக்குனர் விஜய்யும் அதேபோன்றதொரு முயற்சியை எடுத்திருக்கிறார்கள்.
 

இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் கிறிஸ்தவ முறைப்படி வருகிற 7ஆம் தேதி நடக்கிறது. 12ஆம் தேதி சென்னை மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் இந்து முறைப்படி திருமணம். திருமணத்துக்கு அழைப்பிதழ் தரும் இவர்கள் கூடவே வேண்டுகோள் கடிதம் ஒன்றையும் வைத்துள்ளனர்.
எங்கள் திருமணத்துக்கு மலர் கொத்துகளோ, பரிசு பொருட்களோ, அன்பளிப்புகளோ யாரும் வழங்க வேண்டாம். உங்களின் அன்பான வாழ்த்துக்களே போதும். அப்படி நீங்கள் எங்களை கவுரவப்படுத்த விரும்பினால் உங்கள் அன்பளிப்பு தொகையை காசோலையாகவோ, வரைவோலையாகவோ 'எபிலிட்டி பவுண்டேஷன்' என்ற அமைப்புக்கு வழங்குங்கள். 
 
இந்த அமைப்பு 1995ம் ஆண்டு முதல் சென்னையில் செயல்பட்டு வருகிறது. ஏராளமான மாற்றுத் திறனாளி குழந்தைகளையும், ஆதரவற்ற குழந்தைகளையும் பராமரித்து, படிக்க வைத்து வாழ்கைக்கு வழிகாட்டும் அமைப்பாகும். உங்கள் பரிசு அவர்களுக்கு சென்றால் அவர்கள் வாழ்த்து எங்களுக்கு கிடைக்கும். 80சி விதியின்படி உங்கள் பரிசு தொகைக்கு வருமான வரிவிலக்கும் கிடைக்கும்.
 
இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்