மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு கெடுபிடி

புதன், 12 ஆகஸ்ட் 2009 (16:01 IST)
கேரள தயா‌ரிப்பாளர்கள் சங்கமும், தொழில்நுட்பக் கலைஞர்கள் சங்கமும் கூட்டாக எடுத்திருக்கும் முடிவுகள் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் படங்களை பாதிக்கும் என்கிறார்கள்.

மலையாள சினிமாவின் வர்த்தக எல்லை குறுகியது. பெ‌ரிய படங்களுக்கே அறுபது பி‌ரிண்டுகளை தாண்டாது. அதிக‌ரித்துவரும் செலவுகளை சமாளிக்க அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி, செலவுகளை முடிந்தவரை குறைப்பது.

மேலே உள்ள இரு சங்கங்களும் கூட்டாக சில முடிவுகளை எடுத்துள்ளன. அதன்படி 3.5 கோடிக்குள்தான் ஒரு படத்தின் பட்ஜெட் இருக்க வேண்டும் என தீர்மானித்துள்ளன. தமிழில் ஹீரோ, ஹீரோயின் காஸ்ட்யூம் செலவுக்கே சிலர் நான்கு கோடிவரை செலவிடுகின்றனர்.

இந்த கட்டுப்பாட்டால் மம்முட்டி, மோகன்லால் படங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. மம்முட்டி நடித்துவரும் பழஸிராஜஏறக்குறைய பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. அதேபோல் மோகன்லாலின் ஏஞ்சல் ஜான் படத்துக்கும் அதிக பணம் செலவ‌ழிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டால் வருங்காலத்தில் இந்த இருவ‌ரின் படங்களும் பாதிக்கப்படும் என்பது உறுதி.

இதுதவிர காலையில் ஏழு மணிக்கே படப்பிடிப்பை தொடங்க வேண்டும், நடிகர், நடிகைகள் செல்போன் பேசக்கூடாது, 60,000 அடிக்கு மேல் பிலிம் பயன்படுத்தக் கூடாது, 45 நாளில் மொத்தப் படத்தையும் எடுத்து முடித்துவிட வேண்டும் என அவர்களின் தீர்மானங்கள் தொடர்கின்றன.

இந்த தீர்மானங்களுக்கு கேரள நடிகர் சங்கம் எதிர்ப்பு தெ‌ரிவிக்கும் என தெ‌ரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்