பெண்களுக்கு எதிரான பெயரில் ஆண்களை விமர்சிக்கும் படம்

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (11:45 IST)
படத்தின் பெயர்தான் போங்கடி நீங்களும் உங்க காதலும். ஆனால் போஸ்டர்களில் ஒரு கூட்டம் பெண்களை கட்டித் தழுவியபடி காட்சியளிக்கிறார் படத்தின் நாயகனான ராமகிருஷ்ணன். 

குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவில் ராமகிருஷ்ணன் ஹீரோவாக அறிமுகமானார். அடிப்படையில் இவர் ஒரு உதவி இயக்குனர். கதை சொல்ல போன இடத்தில் மேக்கப் போட்டு நடிக்க வைத்தனர். அதன் பிறகு கோரிப்பாளையம் போன்ற ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டினார். பிறகு அவரே ஒரு கதை தயார் செய்து இயக்கி நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம்தான் போங்கடி நீங்களும் உங்க காதலும். 
 
பல படங்களை தயாரித்திருக்கும் கே.ஆர்.கே.மூவிஸ் கே.ஆர்.கண்ணன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
 
படத்தின் பெயர் பெண்களுக்கு எதிரானது போல் தோன்றினாலும் ஆண்களை விமர்சிக்கும் படமாம் இது. காதலிக்கும் போது இருக்கிற அன்பும் அக்கறையும் கல்யாணத்துக்குப் பிறகு முற்றிலும் குறைந்துவிடுகிறது. அதற்கு ஆண்களின் அலட்சியமே காரணம் என்ற கருவை அடிப்படையாகக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறார்.
 
தவறான நட்பும், காதலும் பெண்களுக்கு என்னென்ன கெடுதல்களை உருவாக்கும், அதிலிருந்து அவர்கள் தங்களை எப்படி தற்காத்து கொள்வது என்பது பற்றியும் ராமகிருஷ்ணன் படத்தில் சொல்லியிருக்கிறாராம்.
 
படத்தில் இரண்டு நாயகிகள். ஆத்மியா, காருண்யா. ஆத்மியாவுடன் ராமகிருஷ்ணனுக்கு ஒரு லிப் லாக் காட்சி உள்ளது. யார் செய்த தவறோ இல்லை இருவரும் சேர்ந்து செய்த தவறா தெரியாது... இந்த ஒற்றை முத்தத்துக்கு 7 டேக் போயிருக்கிறார்கள்.
 
ராம 'கிருஷ்ணன்.'
 

வெப்துனியாவைப் படிக்கவும்