பெங்களூர் டேய்ஸ் தமிழ் ரீமேக்கை இயக்கும் தெலுங்கு இயக்குனர்

புதன், 2 ஜூலை 2014 (15:14 IST)
அஞ்சலி மேனன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான பெங்களூர் டேய்ஸ் படத்தை தமிழ், தெலுங்கில் இயக்குனர் பாஸ்கர் ரீமேக் செய்கிறார்.
 
கேரளாவில் பெங்களூ‌ர் டேய்ஸ் இன்னும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் பம்பர்ஹிட் மலையாளப் படம் இதுதான் என்று அறிவித்திருக்கிறார்கள். பஹத் பாசில், நஸ்ரியா நசீம், துல்கர் சல்மான், நிவின் பாலி, இஷா தல்வார் என மலையாளத்தின் இளம் நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். இதன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ரீமேக் உரிமையை பிவிபி சினிமாவும், தில் ராஜுவும் இணைந்து வாங்கியுள்ளனர். தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் இந்த ரீமேக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.
சமந்தா இந்த ரீமேக்கில் நடிக்கிறார். ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு ரீமேக்கை இயக்க இயக்குனரை தேர்வு செய்துள்ளனர். தெலுங்குப்பட இயக்குனர் பாஸ்கர் இந்த ரீமேக்கை இயக்குவார் என கூறப்படுகிறது.
 
2006இல் தில் ராஜு தயாரித்த பொம்மரிலு படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் பாஸ்கர். சித்தார்த், ஜெனிலியா இதில் நடித்திருந்தனர். தெலுங்கில் பம்பர் ஹிட்டான பொம்மரிலுவை தமிழில் சந்தோஷ் சுப்பிரமணியன் என்ற பெயரில் எடுத்தனர். பொம்மரிலு படத்தில் தனக்கு வாய்ப்பளித்த தில் ராஜு கேட்டுக் கொண்டதால் பெங்களூர் டேய்ஸின் தமிழ், தெலுங்கு ரீமேக்கை இயக்க பாஸ்கர் ஒப்புக் கொண்டுள்ளார்.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்