புலிப்பார்வை படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (13:42 IST)
புலிப்பார்வை மற்றும் கத்தி படங்களுக்கு எதிராக மாணவர் அமைப்புகளும் வேறு பல அமைப்புகளும் அணி திரண்டு வருகின்றன. இந்நிலையில் புலிப்பார்வை படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் படத்துக்கு எதிராக கோஷமிட்ட மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதற்கு பல அமைப்புகளும், கட்சிகளும் கண்டனம் தெரிவித்தன. மாணவர் அமைப்புகள் முன்னிலும் ஆவேசமாக இவ்விரு படங்களுக்கு எதிராக போராட துணிந்துள்ளன. புலிப்பார்வை படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை புலிகளின் ராணுவ உடையில் போராளியாக இயக்குனர் பிரவீன் காந்த் சித்தரித்திருப்பதைதான் மாணவர் அமைப்புகள் முக்கியமாக எதிர்க்கின்றன. 
 
இந்நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்தித்து புலிப்பார்வை படம் குறித்தும், நாம் தமிழர் கட்சியினர் மாணவர்களை தாக்கியது குறித்தும் விளக்கமளித்தனர்.
 
"புலிப்பார்வை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவத்துக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. ஆனால் மாணவர் அமைப்பினர் சிலர் இத்தாக்குதலில் எங்கள் கட்சிக்கு தொடர்பு இருப்பது போல அவதூறு தகவல்களை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள். அதில் சீமான் பற்றியும் தேவையில்லாத கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. 
 
ஒரு விழா நடைபெறும்போது அதில் பங்கேற்ற மாணவர்கள் திடீர் என எழுந்து கோஷமிட்டு அநாகரீகமாக நடந்தது கண்டிக்கத்தக்கது. அதே நேரத்தில் அவர்கள் தாக்கப்பட்டதும் கண்டனத்துக்குரியது. நாம் தமிழர் கட்சியினர்தான் மாணவர்களை தாக்கினார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தால் நாங்கள் எந்நேரமும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம். அதுமாதிரி யாராவது நடந்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறோம். 
 
புலிப்பார்வை திரைப்படம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி இருக்கும் நிலையில் அதில் இடம் பெற்று இருக்கும் 3 விதமான காட்சிகளை நீக்குவதற்கு சீமான் வலியுறுத்தி உள்ளார். விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் சீருடையில் இருப்பது போன்ற காட்சியை நீக்குவதற்கு படத்தின் தயாரிப்பாளர் பாரிவேந்தரிடமும் இயக்குனர் பிரவின்காந்தியுடனும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதேபோல விடுதலைப் புலி அமைப்பில் உள்ள பெண்கள் வயிற்று பசிக்காக கண்ணிவெடி தாக்குதலில் ஈடுபடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் மனிதாபிமானமுற்ற முறையில் இருக்கும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சிகளையும் நீக்க சொல்லி உள்ளோம். தற்போது படத்தின் இசை வெளியிட்டு விழா மட்டுமே நடந்து உள்ளதாலும், படம் வெளியாகும்போது இந்த 3 காட்சிகளும் இருக்காது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறி காட்சிகள் இடம் பெற்றால் அதனை எதிர்த்து நாம் தமிழ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்