பிரேம்ஜியின் திருட்டு இசை - நீங்கயெல்லாம் நல்லா வருவீங்க பாஸ்

புதன், 30 ஏப்ரல் 2014 (12:36 IST)
சுய பகடி என்று ஒன்று உள்ளது. தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்வது. இதற்கு பெரிய மனசு வேண்டும். தன்னைத்தானே பகடி செய்து கொள்வதால்தான் படங்களில் வடிவேலுவின் கைப்புள்ளத்தனங்கள் ரசிக்கப்படுகின்றன. 
என்னமோ நடக்குது படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்துக்கு இசை பிரேம்ஜி அமரன். படம் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படயூனிட்டே திருட்டு இசை என்ற பெயரில் ஒரு வீடியோவை யுடியூபில் வெளியிட்டிருக்கிறார்கள்.
 
பிரேம்ஜி பாடல் கம்போஸிங் செய்யும் அறையில் அவர் வருவதற்கு முன் ரகசிய கேமராவை படத்தின் இயக்குனர் பொருத்துகிறார். பிறகு பிரேம்ஜி வந்ததும் அவரிடம் சிச்சுவேஷனை சொல்லி டியூன் போடச் சொல்கிறார். எனக்கு தனியாக இருந்தால்தான் டியூன் போட வரும் என்று இயக்குனரை வெளியே அனுப்பிவிட்டு இளையராஜாவின் பாடல்களை அவசரமாக கேட்கிறார் பிரேம்ஜி. இயக்குனர் உள்ளே வந்ததும் ராஜாவின் பாடலை சிறிது மாற்றி டியூன் போட டியூன் ஓகே ஆகிறது.
 
இந்த வீடியோவை பிரேம்ஜிக்கும் தெரிந்துதான் எடுத்தார்கள். இளையராஜாவின் பாடலை கேட்டுதான் பாடல் கம்போஸிங் செய்கிறேன் என்பதை இதன்மூலம் தெரியப்படுத்தியிருக்கிறார் பிரேம்ஜி.
 
இப்படி வெளிப்படையாக ஒத்துக் கொள்ளவும் ஒரு மனம் வேண்டுமில்லையா. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்