பிரதமருக்கு கடிதம் - வீணாகிப்போன விஜய்யின் வேண்டுகோள்

ஞாயிறு, 13 ஜூலை 2014 (14:34 IST)
சென்ற ஆட்சியில் திரைத்துறையினருக்கு விதிக்கப்பட்ட 12.5 சதவீத சேவை வரியை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு விஜய் எழுதிய வேண்டுகோள் கடிதத்துக்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. பதிலளிக்கப்படாமலே நிராகரிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆட்சியில் சேவை வரி விதிக்கப்பட்ட போதே திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் வரியை நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கடிதங்களும் எழுதப்பட்டன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி பிரதமரானார். தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை கோயம்புத்தூர் சென்று சந்தித்தார் விஜய். அவருக்கு விஜய் ஆதரவும் தெரிவித்தார்.
 
மோடி பதவியேற்ற பிறகு சேவை வரியை ரத்து செய்யும்படி விஜய் அவருக்கு கடிதம் எழுதினார். கடித நகல் அனைத்து ஊடகங்களுக்கும் தரப்பட்டது. மோடிக்கு ஆதரவு தெரிவித்தவர் என்பதால் முறையான பதிலோ நடவடிக்கையோ விஜய்யின் கடிதத்துக்கு கிடைக்கும் என பலரும் நம்பினர். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
 
நிதிநிலை அறிக்கையில் சேவை வரி ரத்து செய்யப்படும் அல்லது குறைக்கப்படும் என்று திரைத்துறையினர் எதிர்பார்த்தனர். அந்த எதிர்பார்ப்பும் வீணாகிப் போனது. விஜய்யின் கடிதம் எந்த பதிலும் அளிக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது அவருடைய ரசிகர்களுக்கு வருத்தம்தான்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்