பளீரடிக்கும் வெள்ளை வேட்டி சட்டை - சதுரங்க வேட்டையர்களின் டைமிங் காஸ்ட்யூம்

செவ்வாய், 15 ஜூலை 2014 (19:41 IST)
சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டி கட்டி வந்த நீதிபதியையும், வழக்கறிஞரையும் அனுமதிக்க மறுத்தது பெரும் சர்ச்சையாகி அந்தப் பிரச்சனை சட்டசபையிலும் எதிரொலித்தது. சிறை நிரப்பும் போராட்டம் நடத்தயிருப்பதாக சிலர் அறிவித்துள்ளனர். காந்தியை வேட்டிகட்ட வைத்த நாட்டில் வேட்டிக்கு தடையா என்று ஒரு ஐயகோ அறிக்கை வெளியிட்டுள்ளார் குமரி அனந்தன். இப்படி நாலா திசையிலும் வேட்டி படபடக்கிற நேரத்தில் சென்னை வடபழனி க்ரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் பளீரடிக்கும் வெள்ளை வேட்டி சட்டையில் திரண்டார்கள் சதுரங்க வேட்டை படக்குழுவினர். பத்திரிகையாளர் சந்திப்புக்குதான் இந்த டைமிங் காஸ்ட்யூம்.
சதுரங்க வேட்டையின் நாயகன் நட்ராஜ், படத்தின் தயாரிப்பாளர் மனோபாலா, நடிகர்கள் இளவரசு, பொன்வண்ணன், சத்யா, செந்தில், வளவன் இயக்குனர் வினோத், படத்தை வாங்கி வெளியிடும் இயக்குனர் லிங்குசாமி, சுபாஷ் சந்திர போஸ், இசையமைப்பாளர் ஷான் ரால்டன், ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ், எடிட்டர் ராஜா சேதுபதி என படம் சம்பந்தப்பட்டவர்கள் வேட்டி சட்டையில் வந்தால், படத்துக்கு சம்பந்தமில்லாத பாலாஜி சக்திவேல், சசி போன்றவர்களும் உஜாலா வெண்மையில் பளீரிட்டனர்.
 
சென்னை கிரிக்கெட் கிளப்பில் வேட்டிக்கு தடை விதித்ததால்தானா இந்த காஸ்ட்யூம் என்று கேட்டதற்கு... ஆமா என்றா சொல்வார்கள்? படத்தின் கதைக்கும் வேட்டி சட்டைக்கும் தொடர்பு இருக்கு அதுதான் வேட்டி சட்டை என்றனர்.
 
லிங்குசாமிதான் பரவசமாக இருந்தார். அவரது திருப்பதி பிரதர்ஸ் இந்த வருடம் வாங்கி வெளியிட்ட கோலிசோடா, மஞ்சப்பை இரண்டுமே ஹிட். ஆகஸ்டில் அஞ்சான் வெளியாவதால் அதற்கு நடுவில் எந்தப் படத்தையும் வாங்க வேண்டாம் என்றிருந்திருக்கிறார். அவரை இழுத்து வந்து பாதி தூக்கத்தில் சதுரங்க வேட்டையை பலவந்தமாக பார்க்க வைத்திருக்கிறார்கள். தூக்க கலக்கத்துடன் பார்த்தவரை படம் நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறது. அப்புறமென்ன... முழுப் படத்தையும் பார்த்த கையோடு விநியோக உரிமையை வாங்கிவிட்டார்.
 
பொதுவாக பத்திரிகையாளர்கள் சந்திப்பிற்கு படம் சம்பந்தப்பட்டவர்கள்தான் வருவார்கள். சதுரங்க வேட்டைக்கு பாலாஜி சக்திவேல், கார்த்திக் சுப்பாராஜ் போன்றவர்கள் வந்திருந்து நண்பர் லிங்குசாமியின் படத்தைப் பாராட்டிப் பேசி ஒரு பெப்பை ஏற்படுத்திச் சென்றனர்.
 
படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்