தென்னிந்திய மொழிகளில் அஞ்சலி நடிக்கத் தடை - தீவிரம் காட்டும் ஜாக்குவார் தங்கம்

திங்கள், 23 ஜூன் 2014 (14:10 IST)
மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் அஞ்சலி நடிக்கத் தடை விதிக்க வேண்டும் என்று தென்னிந்திய பட அதிபர்கள் சங்கத்தின் (கில்டு) பொதுச் செயலாளர் ஜாக்குவார் தங்கம் அந்தந்த மொழி ஃபிலிம் சேம்பர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
 
2013இல் மு.களஞ்சியத்தின் ஊர் சுற்றி புராணம் படத்தில் பத்து நா‌ட்கள் நடித்தார் அஞ்சலி. அதன் பிறகு அவரது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட தகராறில் கோர்ட்டு வழக்கு என்று அஞ்சலியின் திரைவாழ்க்கை சில மாதங்கள் திசை மாறியது. தனது சித்தி மட்டுமின்றி மு.கஞ்சியத்தின் மீதும் புகார் சொன்னார் அஞ்சலி. தன்னைத் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளப் பார்க்கிறார்கள், தனது வருமானத்தை அபகரித்துக் கொண்டனர் என வெளிப்படையாக அவர் புகார் செய்தார். அஞ்சலி சொன்னது பொய்ப் புகார், அதனை அவர் நிரூபிக்க வேண்டும். அவரது புகாரால் எனது கௌரவத்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டது எனக் களஞ்சியம் அஞ்சலி மீது வழக்கு தொடர்ந்தார்.
 
இந்நிலையில் தெலுங்கில் கீதாஞ்சலி என்ற படத்திலும், கன்னடத்தில் தீரா ராணா விக்ரமா என்ற படத்திலும் நடிக்க அஞ்சலி ஒப்பந்தமானார். தமிழில் ஜெயம் ரவியை வைத்து சுராஜ் இயக்கும் புதிய படத்திலும் அவர் கமிட் செய்யப்பட்டார்.
 

என்னுடைய ஊர் சுற்றி புராணத்தை அஞ்சலி முடித்துக் கொடுக்காதவரை வேறு புதிய படங்களில் அவர் நடிக்கக் கூடாது என களஞ்சியம் நெருக்கடி தந்து வருகிறார். பல்வேறு சங்கங்களில் புகாரும் தந்துள்ளார். எக்காரணத்தை முன்னிட்டும் களஞ்சியத்தின் படத்தில் நடிப்பதில்லை என்பதில் அஞ்சலியும் உறுதியாக இருக்கிறார்.

களஞ்சியத்தின் படத்தில் நடிக்க அவர் மறுப்பதற்கு பாதுகாப்பும் ஒரு காரணம். சமீபத்தில் கோடை மழை படத்தின் படப்பிடிப்பில் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக களஞ்சியம் கதாநாயகி பிரியங்காவை மயக்கம் போட்டு விழும் அளவுக்கு கடுமையாக அறைந்தார். திட்டமிட்டு நடந்த இந்தத் தாக்குதலை கண்டிக்க மனமில்லாத தென்னிந்திய பட அதிபர்கள் சங்க (கில்டு) செயலாளர் ஜாக்குவார் தங்கம் அஞ்சலி நடிக்க தடை விதிக்க வேண்டும் என்று மலையாளம், தெலுங்கு, கன்னட ஃபிலிம் சேம்பர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அஞ்சலியை நடிக்கவிடாமல் தடுப்பதில் ஜாக்குவார் தங்கம் ஸ்பெஷல் கவனம் எடுத்து வருகிறார்.
 
பத்து தினங்கள் படத்தில் நடித்த அஞ்சலியால் பல கோடி ரூபாய் நஷ்டம் என்பதெல்லாம் அஞ்சலியை முடக்குவதற்காக சொல்லப்படும் ஊதிப் பெருக்கப்பட்ட கற்பனை நஷ்டம். திரையுலகம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்