ஜெயப்பிரகாஷ் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை...?

சனி, 14 ஜூன் 2014 (12:01 IST)
தமிழ் சினிமாவின் சிறந்த குணச்சித்திர நடிகராக அறியப்படும் ஜெயப்பிரகாஷ் படங்களில் நடிக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதிக்க வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. எந்த வம்பு தும்புக்கும் போகாத ஜெயப்பிரகாஷ் மீது இப்படியொரு கடுமையான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளிவர என்ன காரணம்.
 
அதனை தெரிந்து கொள்ள சில வருடங்கள் பின்னோக்கி போக வேண்டும்.
 
அப்போது ஜெயப்பிரகாஷ் தயாரிப்பாளர். அவரும் ஞானவேலும் (இவர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா இல்லை. வேறு ஞானவேல்) இணைந்து படங்கள் தயாரித்து வந்தனர். குறிப்பாக விஜயகாந்தை வைத்து சில படங்கள் தயாரித்தனர். லாபம் இல்லை, நஷ்டம் கணிசம் என்ற நிலையில் சேரனின் வற்புறுத்துதலால் அவரது மாயக்கண்ணாடியில் நடித்தார் ஜெயப்பிரகாஷ். அது அவரது வாழ்க்கையை புரட்டிப் போட்டது. இன்று ஒரு நல்ல வேடம் இருந்தால் நேராக ஜெயப்பிரகாஷை தேடித்தான் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் செல்கிறார்கள்.
 
ஜெயப்பிரகாஷ் படங்கள் தயாரித்த கடந்தகாலத்தை மறந்துவிட்டாலும் அப்போதைய கடன் சமீபத்தில் விஸ்வரூபமெடுத்தது. கடன் முழுவதையும் என் தலையில் கட்டி அவர் ஒதுங்கிவிட்டார் என முன்னாள் பார்ட்னர் ஞானவேல் கொடுத்த புகாரின் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது. ஜெயப்பிரகாஷ் ஞானவேலுக்கு ஒன்றேகால் கோடி தர வேண்டும் என பஞ்சாயத்தானது. அதன் முதல்தவணையாக ஜெயப்பிரகாஷ் தந்த செக் பணமில்லை என திரும்பிவர, மீண்டும் பிரச்சனை ஆரம்பித்துள்ளது.
 
தயாரிப்பாளர்கள் சங்கம் பணம் தர வேண்டும் என சொல்லியும் ஜெயப்பிரகாஷ் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பதால் படங்களில் அவர் நடிக்க தடைவிதிக்கப்படலாம் என்கிறார்கள்.
 
இறுதி முடிவு என்ன என்பது இன்றோ நாளையோ தெரிந்துவிடும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்