ஜுன் 13 வெளியாகும் விவேக்கின் நான்தான் பாலா

புதன், 4 ஜூன் 2014 (11:58 IST)
வடிவேலு, கஞ்சா கருப்பு, சந்தானம் என்று விவேக்குக்கு பிறகு நடிக்க வந்த காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோவாகிவிட்டனர். விவேக்கின் நாயக அவதாரம் மட்டும் இன்னும் நடந்தேறவில்லை. பஞ்சு என்ற பெயரில் ஒரு படம் தொடங்கி ஆரம்பித்த ஜோ‌ரில் ஊத்தி மூடியது. பிறகு சொல்லி அடிப்பேன் என்ற படம். படம் முடிந்தும் இன்னும் பெட்டிக்குள்ளிருந்து வெளிவர முடியவில்லை.
இந்நிலையில் நான்தான் பாலா என்ற படத்தில் நாயகனாக விவேக் நடித்தார். முந்தைய சென்டிமெண்ட்களிலிருந்து தப்பி வரும் 13 -ம் தேதி படம் வெளியாகிறது.
 
காமெடி நடிகர்கள் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில்தான் ஹீரோவாகியிருக்கிறார்கள். அல்லது அவர்கள் ஹீரோவாகும் படம் பக்கா கமர்ஷியல் வஸ்துகள் நிறைந்ததாக இருக்கும். நான்தான் பாலா இந்த இரண்டிலிருந்தும் மாறுபட்டிருக்கிறது. படத்தில் விவேக்கின் பிராமண கெட்டப்பும், படம் குறித்த செய்திகளும் படம் கொஞ்சம் சீரியஸ் என்ற நினைப்பையே தருகின்றன. காமெடி நடிகரின் சீரியஸ் படம் என்றால் வியாபாரம் படுத்துவிடும் என்பதால் நான்தான் பாலா முழுநீள கமர்ஷியல் படம் என்று விளம்பரமே தருகிறார்கள்.
 
எது எப்படியோ. இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்க்கிறார் விவேக். படத்துக்காக ரொம்பவும் மெனக்கெட்டிருக்கிறார். சமஸ்கிருதத்தில் பேசுவது போல் காட்சி இருந்ததால் நிஜமாகவே சமஸ்கிருதம் படித்து விவேக்கே சமஸ்கிருதத்தில் டப்பிங்கும் பேசியுள்ளார். இதேபோல் பல விஷயங்கள்.
 
பாலாவிடம் உதவியாளராக இருந்த கண்ணன் என்பவர்தான் இதன் இயக்குனர். இசை வெங்கட் க்ருஷி.
 
ட்ரிபிள் எஸ் என்டர்டெயின்மெண்ட் லாரன்ஸ் படத்தை தயாரித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்