ஜுன் 13 வெளியாகும் முண்டாசுப்பட்டி

வியாழன், 29 மே 2014 (11:42 IST)
சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மெண்டும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்திருக்கும் முண்டாசுப்பட்டி ஜுன் 13 திரைக்கு வருகிறது.
குறும்படமாக எடுக்கப்பட்ட பல படங்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. காதலில் சொதப்புவது எப்படி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்கள் முதலில் குறும்படமாக எடுக்கப்பட்டவை. அந்த வரிசையில் குறும்படமாக எடுக்கப்பட்டு இயக்குனர் ராமினால் முழுநீள திரைப்படமாக உருவாகியிருக்கும் படம்தான் இந்த முண்டாசுப்பட்டி. ராம் இயக்கும் முதல் முழுநீளப் படம் இது.
 
முண்டாசுப்பட்டி என்பது ஒரு கற்பனை கிராமம். இங்கு 1947 -ல் ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த நிகழ்வுக்குப் பிறகு அந்த கிராமத்தில் உள்ள யாரும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை. மீறி எடுத்துக் கொண்டால் மரணம் நிச்சயம் என்ற மூட நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தின் நாயகனான விஷ்ணு, தனது நண்பன் காளியுடன் அந்த கிராமத்துக்கு வருகிறார். புகைப்பட கலைஞனான அவர் எடுக்கும் புகைப்படத்தால் சில பிரச்சனைகள் ஏற்பட அந்த கிராமத்து ஜனங்கள் இருவரையும் கிராமத்தில் சிறை வைக்கிறார்கள். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவையுடன் கூறியுள்ளனர்.
 
புகைப்படம் எடுத்தால் இறப்பு நிச்சயம் என்ற மூட நம்பிக்கைதான் படத்தின் மையம். இன்றைய நவீன காலகட்டத்தில் இந்த கான்செப்ட் எடுபடாது என்பதால் படத்தின் கதை எண்பதுகளில் நடப்பதாக சித்தரித்துள்ளனர். இந்த வருடம் வெளியாகவிருக்கும் எதிர்பார்ப்புக்குரிய நல்ல படங்களில் ஒன்று முண்டாசுப்பட்டி. சி.வி.குமாரின் தயாரிப்பு என்பதால் படம் வித்தியாசமாக நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்