கோச்சடையான் கமல் நடிக்க வேண்டிய படம், எனக்குக் கிடைத்தது கடவுளின் பரிசு

திங்கள், 21 ஏப்ரல் 2014 (18:40 IST)
விக்கிரம சிம்ஹா (கோச்சடையான்) கமல் நடிக்க வேண்டிய படம். நான் நடித்தது கடவுள் தந்த பரிசு என்று ஹைதராபாத்தில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.
கோச்சடையான் தெலுங்கில் விக்கிரம சிம்ஹா என்ற பெயரில் வெளியாகிறது. அதன் பாடல்கள் வெளியீட்டுவிழா ஹைதராபாத்தில் நடந்தது. ரஜினி, லதா ரஜினிகாந்த், சௌந்தர்யா அஸ்வின் ரஜினியின் நண்பரும் நடிகருமான மோகன்பாபு, அவரது மகள் மஞ்சு, தாசரி நாராயணராவ், ராமநாயுடு உள்பட ஏராளமான திரை பிரபலங்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் ரஜினியின் பேச்சு உருக்கமாக அமைந்தது.
 
 

ராணா படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருந்ததாகவும், அந்த நேரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியதால் ராணாவுக்குப் பதில் கோச்சடையானில் நடித்ததாகவும் ரஜினி தெரிவித்தார்.
எனது மகள் சௌந்தர்யா டைரக்ட் செய்கிறார் என்பதால் இந்தப் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன். கடந்த இரண்டரை வருடங்களாக சௌந்தர்யா கஷ்டப்பட்டு இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

இதனை 2டி யில் பார்த்தேன். பத்து நிமிடம் பார்த்த போது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

ஆனால் பத்து நிமிடத்துக்குப் பிறகு கதையின் போக்கு அனிமேஷன் படம் என்பதை மறந்து படத்தோடு ஒன்றிப்போக வைத்தது.
 

விக்கிரம சிம்ஹா கமல் நடிக்க வேண்டிய படம். கமல் என்னைவிட சிறந்த நடிகர். சினிமா தொழில்நுட்பம் குறித்து நன்கு தெரிந்தவர்.

ரோபோ, விக்கிரம சிம்ஹா போன்ற படங்கள் அவர் செய்ய வேண்டியது. தொழில்நுட்பம் தெரியாத நான் நடித்தது கடவுள் தந்த பரிசு என்றார்.





 

வெப்துனியாவைப் படிக்கவும்