குயின் படத்தின் நான்கு மொழி உரிமைகளை வாங்கிய தியாகராஜன்

வியாழன், 12 ஜூன் 2014 (15:23 IST)
கங்கனா ரனாத் நடிப்பில் விகாஷ் பால் இயக்கிய குயின் படத்தின் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளின் ரீமேக் உரிமைகளை நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான தியாகராஜன் வாங்கியுள்ளார்.
சமீபத்தில் வெளியான இந்திப் படங்களில் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்ற படம் குயின். அப்பாவின் வழிகாட்டலில் வாழ்கிற கட்டுப்பெட்டியான இளம்பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவளின் கட்டுப்பெட்டித்தனம் காரணமாக திருமணத்துக்கு முன்பே நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஓடிப்போகிறான். விரக்தியடையும் அப்பெண் ஹனிமூனுக்காக எடுத்த டிக்கெட்டுகளுடன் தனியாக வெளிநாடுகளுக்கு பயணமாகிறாள். அவள் தனியாக வெளியே செல்வது அதுதான் முதல்முறை. அந்தப் பயணம் அவளை முழுமையாக மாற்றுகிறது. அந்த ரசவாதத்தை மிகச்சிறப்பாக திரையில் கொண்டு வந்தது குயின்.
 
இதன் ரீமேக் உரிமையை பெற கடுமையான போட்டி நடந்தது. இறுதியில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளின் ரீமேக் உரிமையையும் மொத்தமாக வாங்கியுள்ளார் தியாகராஜன். தற்போது இவரின் ஸ்டார் மூவிஸ் தியாகராஜனின் மகன் பிரசாந்த் நடிக்கும் சாஹசம் படத்தை தயாரித்து வருகிறது.
குயின் ரீமேக்கில் நடிக்க முன்னணி நடிகைகள் பலரும் ஆர்வமுடன் உள்ளனர். ஒன்றிரண்டு படங்கள் இயக்கிய இளம் இயக்குனரை வைத்து குயின் ரீமேக்கை எடுக்கயிருப்பதாக தியாகராஜன் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் நான்கு மொழிகளிலும் படத்தை எடுத்து 2015 -ல் நான்கையும் வெளியிட வேண்டும் என்பதே அவரது எண்ணம். 
 
குயினில் கங்கனாவின் தோழியாக லிசா ஹெய்டன் நடித்திருந்தார். அவரையே ரீமேக்கிலும் நடிக்க வைக்க தியாகராஜன் விரும்புகிறார். மற்ற நட்சத்திரங்கள் தென்னிந்திய மொழியில் பிரபலமானவர்களாக இருப்பார்கள். நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனரை விரைவில் முடிவு செய்து இந்த வருடமே படப்பிடிப்பை துவக்க உள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்