குத்துச்சண்டைக்கு இழிவு - மான் கராத்தேயை தடை செய்ய கோரிக்கை

செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (12:06 IST)
மான் கராத்தே படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயருடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மான் கராத்தேயில் உள்ள கராத்தே வெற்றுமொழிச் சொல், மேலும் படத்தில் தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரான காட்சிகள் உள்ளன. எனவே படத்துக்கு தரப்பட்டிருக்கும் வரிச்சலுகையை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 
இந்நிலையில் குத்துச்சண்டையை படத்தில் இழிவுப்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை திருவெற்றியூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை தந்தார். அந்த மனு விவரம் வருமாறு -

நான் தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்தில்  மாநில அளவிலான போட்டிகளிலும் மற்றும் தேசிய அளவிலான போட்டிகளிலும் பல பரிசுகளை பெற்றுள்ளேன். தற்போது குத்துச்சண்டை பயிற்சி குழு நடத்தி வருகிறேன்.
சமீபத்தில் திரைக்கு வந்துள்ள மான் கராத்தே படம் குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் குத்துச்சண்டையை இழிவுபடுத்தும் வகையில் நிறைய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டும். 

தமிழ்நாடு குத்துச்சண்டை கழகத்திடம் உரிய அனுமதியும், ஆலோசனையும் பெற்று, குத்துச்சண்டை தொடர்பான காட்சிகளை எடுத்திருக்கலாம். ஆலோசனை எதுவும் பெறவில்லை. உரிய அனுமதியும் பெறவில்லை. இது சட்டத்திற்கு புறம்பான செயல்.
எனவே மான் கராத்தே படத்தின் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் திருக்குமரன், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மான் கராத்தே படத்தை தடை செய்யவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்