கத்தி என்னோட கதை - கோபிக்கு கிடைக்குமா நீதி?

வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (17:15 IST)
காய்த்த மரத்தில் கல்லடிப்படுவது சகஜம்தான். ஆனால் கத்தி படத்துக்கு எதிராக பீரங்கி வைத்து பிளந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தனது பங்குக்கு ஒரு ஏவுகணை வீசியிருக்கிறார் மீஞ்சூரைச் சேர்ந்த கோபி என்பவர்.
என்னவாம்..?
 
முருகதாஸிடம் இவர் இரண்டரை மணி நேரம் ஒரு கதை சொன்னாராம். கதை பிடித்துப் போக இன்னும் மெருகேற்றிவிட்டு வாங்க என்றிருக்கிறார் முருகதாஸ். ஒன்றரை வருடம் செலவளித்து கோபி கதையை மெருகேற்ற, அதற்குள் கத்தி படத்தை தொடங்கினார் முருகதாஸ். படம் முடியும் நிலையில், கத்தி படம் தான் சொன்ன கதை என்று கோபிக்கு தெரிய வந்திருக்கிறது. அப்புறமென்ன... கத்தி கதை என்னோடது. முருகதாஸையும், அவரை எனக்கு அறிமுகப்படுத்திய ஜெகனையும் கைது செய்ய வேண்டும் என கோபி கோர்ட்டுக்கு போயிருக்கிறார்.
 
இதேபோன்று பல சம்பவங்கள் தமிழ் சினிமாவில் நடந்துள்ளது. தசாவதாரம் என்னோட கதை என்றுகூட ஒருவர் வழக்கு தொடர்ந்தார். விஷயம் அதுவல்ல. இந்த வழக்கு என்னவாகப் போகிறது என்பதுதான்.
பாக்யராஜின் இன்று போய் நாளை வா படத்தை கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற பெயரில் எடுத்து கல்லா கட்டினார்கள். அதற்கே பாக்யராஜுக்கு நீதி கிடைக்கவில்லை. தாண்டவம் என்னோட கதை என்று சொன்ன உதவி இயக்குனரை இயக்குனர் சங்கமே நெட்டி தள்ளியது. 
 
கத்திக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கும் கோபி சொல்வது உண்மையாக இருக்குமா? உண்மையாக இருந்தால் அவருக்கு நீதி கிடைக்குமா?
 
இந்த வழக்கில் கோபி சார்பில் வழக்கில் ஆஜரானவர் பிரபல வக்கீல் சங்கரசுப்பு. அதனால் கண்டிப்பாக ஏதாவது தீர்வு கிடைக்கும் என்கிறார்கள். 
 
பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
 

வெப்துனியாவைப் படிக்கவும்