ஓய்வு பெறும் சங்கீத ஸ்வரங்கள்

வெள்ளி, 31 ஜனவரி 2014 (17:53 IST)
அழகன் படத்தில் வரும் சங்கீத ஸ்வரங்கள் பாடல் இன்றும் பலருடைய விருப்பப் பாடல். அதில் வரும் சாதி மல்லி பூச்சரமே பாடல் எளிதில் மறக்க கூடியதா? அழகனுக்கு அற்புதமாக இசையமைத்த மரகதமணி இந்த வருடம் டிசம்பரோடு சினிமாவுக்கு முழுக்கு போடுவதாக அறிவித்துள்ளார்.
FILE

மார்க்கெட்டின் உச்சியில் இருக்கும் போது, இனி நான் இசையமைக்கப் போவதில்லை என்று எந்த இசையமைப்பாளராவது சொன்னால், இன்று என்ன ஏப்ரல் ஒன்றா என்றுதான் பார்க்கத் தோன்றும். ஆனால் இந்த வருடம் டிசம்பர் 9 ஆம் தேதியோடு சினிமாவுக்கு முழுக்குப் போடுவதாக தனது முகநூல் பக்கத்தில் மரகதமணி தெ‌ரிவித்திருப்பது இசைப்‌ரியர்களுக்கு பே‌ரிழப்பு.

தமிழில் மரகதமணி என்றாலும் தெலுங்கில் அவர் கீரவாணி. 1990ல் மரகதமணி இசையில் முதல் படம் தெலுங்கில் வெளியானது. அதற்கு அடுத்த வருடமே அவரை அழகன் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் பாலசந்தர். அழகன் படத்தின் ஒவ்வொரு பாடலும் மாணிக்கம்.

வானமே எல்லை, சாதி மல்லி என்று தனது அடுத்தடுத்தப் படங்களில் மரகதமணியை பாலசந்தர் பயன்படுத்தினார். மரகதமணியின் கவனம் தெலுங்குப் பக்கம் இருந்ததால் அவர் தொடர்ச்சியாக தமிழில் பணியாற்ற முடியாமல் போனது. நம்மவர்களும் அவ‌ரின் திறமையை பெ‌ரிதாக கண்டு கொள்ளவில்லை.
FILE

தெலுங்கில் 2012ல் வெளியான தம்மு, ஈகா போன்ற பெ‌ரிய படங்களுக்கு அவர்தான் இசையமைத்திருந்தார். வெளிவரவிருக்கும் சேகர் கம்மூலாவின் அனாமிகா, தயாராகிக் கொண்டிருக்கும் ராஜமௌலியின் பாகுபலி இரண்டுக்கும் அவர்தான் இசை.

பெ‌ரிய பட்ஜெட் படங்கள் சகஜமாக தேடிவரும் நிலையில் இந்த ஓய்வு அறிவிப்பை அவர் வெளியிட்டிருப்பது ஆச்ச‌‌ரியம்.

1989 டிசம்பர் 9ஆம் தேதி தனது முதல் பாடலை சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பதிவு செய்தார். அதே டிசம்பர் 9ஆம் தேதியை தனது ஓய்வு பெறும் நாளாக அறிவித்திருக்கிறார்.

சில முடிவுகள் மாற்றப்படுவதுதான் நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்