ஒரு நேரத்தில் ஒரே படம் - தனுஷ் திடீர் முடிவு

சனி, 28 ஜூன் 2014 (17:22 IST)
ஒரே நேரத்தில் பல படங்கள் நடிப்பதை நிறுத்திக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார் தனுஷ். 2015-லிருந்து புதிதாக தனது கரியரை தொடங்கப் போவதாகவும் கூறியுள்ளார்.
தனுஷ் ஒரு நல்ல நடிகர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனை ஆடுகளம் போன்ற பல படங்களில் நிரூபித்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக நிலைமை அவ்வளவு சாதகமாக இல்லை. இந்தியில் நடித்த ராஞ்சனா தவிர்த்து பெயர் சொல்லும்படி எந்தப் படமும் அமையவில்லை, ஓடவில்லை. நையாண்டி போன்ற படங்களில் தனுஷ் எதற்கு நடிக்கிறார் என்று நேரடியாகவே விமர்சனம் வைக்கப்பட்டது. இது தனுஷை சிந்திக்க வைத்திருக்க வேண்டும்.
 
இனி ஒரு நேரத்தில் ஒரேயொரு படம் மட்டுமே நடிக்கயிருப்பதாகவும், வருடத்துக்கு இரு படங்களில் - தமிழில் ஒன்று, இந்தியில் ஒன்று - மட்டுமே நடிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

தற்போது பால்கி இயக்கத்தில் அமிதாப், அக்ஷராவுடன் இந்திப் படத்தில் நடித்து வருகிறார். தமிழில் வேல்ராஜ் இயக்கத்தில் நடித்த வேலையில்லா பட்டதாரி முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஏற்கனவே கமிட்டான சில படங்களும் உள்ளன.
இவையனைத்தையும் இந்த வருட இறுதியோடு முடித்து 2015இல் ஃப்ரெஷ்ஷாக ஆரம்பிக்கப் போகிறாராம். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தயிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
 
நல்ல முடிவு, தொடர்ந்து கடைபிடித்தால் தனுஷுக்கும், ரசிகர்களுக்கும் ஏன்... சினிமாவுக்கும்கூட நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்