ஒரு இயக்குன‌ரின் டார்ச்சர்

வெள்ளி, 7 ஆகஸ்ட் 2009 (19:42 IST)
இயக்குனர்களை யதார்த்தமேனியா பிடித்தாட்டுகிறது. இந்த புது வியாதியால் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் அப்பாவி புதுமுக நடிகர்கள்.

நந்தா பெ‌ரியசாமி மாத்தியோசி என்ற படத்தை எடுத்து வருகிறார் அல்லவா. ஒரு கல்லூ‌ரியின் கதைக்குப் பிறகு இப்போதுதான் படம் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. நான்கு ஐடி இளைஞர்கள்தான் ஹீரோக்கள்.

பார்க்க பரதேசி போல இருக்க வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு தொடங்குவதற்கு நான்கு வாரங்கள் முன்பே டார்ச்சரை தொடங்கியிருக்கிறார். செருப்பில்லாமல்தான் நடக்க வேண்டும், கட்டாந்தரையில் படுக்க வேண்டும், கஞ்சிதான் குடிக்க வேண்டும் என நான்கு பேரையும் படுத்தியெடுத்திருக்கிறார். எல்லாம் படம் யதார்த்தமாக வர வேண்டும் என்பதற்காகவாம்.

சமீபத்தில் ஐஸ் கட்டி மீது நால்வ‌ரில் ஒருவரை படுக்க வைத்து டார்ச்சர் கொடுப்பதுபோல காட்சி. யதார்த்தமாக காட்சி வர வேண்டும் என்பதற்காக ஜட்டியோடு அரைநாள் ஐஸ் கட்டியில் உருட்டியிருக்கிறார்கள். இதில் அந்த அப்பாவிக்கு ஜன்னியே வந்திருக்கிறது. பிறகு பிராந்தி கொடுத்து உடம்பு டெம்பரேச்சரை நார்மலாக்கியிருக்கிறார்கள்.

யதார்த்தம் என்ற பெய‌ரில் இப்படி உருட்டி எடுப்பவர்களை என்ன செய்யலாம்? மிருக வதைக்கு தடை சட்டம் இருப்பதுபோல் இதற்கும் ஏதாவது செய்தாக வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்