உத்தம வில்லனில் பயன்படுத்தப்படும் புராதன இசைக்கருவிகள்

திங்கள், 23 ஜூன் 2014 (15:26 IST)
இசைக்கு முக்கியத்துவம் தந்து உத்தம வில்லனை உருவாக்கி வருகிறார் கமல்ஹாசன். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகக் கலைஞன் உத்தமன், தற்கால சினிமா நடிகர் மனோரஞ்சன் என இரு வேடங்களில் கமல் நடித்து வருகிறார்.
 
சரித்திரக்கால இசை படத்தில் பிரதானமாக வருகிறது. இதற்காக இந்தோனேஷியாவின் பாலியிலிருந்து சில புராதன இசைக்கருவிகளை கமல் வாங்கி வந்துள்ளார். இந்தக் கருவிகள் இதுவரை சினிமாவில் பயன்படுத்தப்பட்டதில்லை என இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறினார். இவர்தான் உத்தம வில்லனுக்கு இசை.
ரமேஷ் அரவிந்த் இயக்கிவரும் இந்தப் படத்தில் கமலுடன் நாசர், ஜெயராம், ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி மேனன், பார்வதி நாயர், ஊர்வசி ஆகியோரும் நடித்து வருகின்றனர். கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் போன்ற ஜாம்பவான்களும் படத்தில் உள்ளனர். வில்லுப் பாட்டும், கேரளாவின் பாரம்பரிய தெய்யம் கலையும் படத்தில் பிரதானமாக வருகிறது. இந்த இரு கலைகளிலும் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகளை வைத்து பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் ஜிப்ரான். கமல் வாங்கி வந்த சரித்திரக்கால இசைக்கருவிகளையும் இந்தப் பாடலில் பயன்படுத்தியுள்ளார்.
 
வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகத்தையும் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள். படத்தில் இடம்பெறும் பாடல்களில் மூன்றை கமல் பாடியுள்ளார்.
 
உத்தம வில்லன் கமலின் வழக்கமான காமெடிப் படமாக இருக்கும் என்ற எண்ணத்தை இசை குறித்த செய்திகள் மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளன. இந்தப் படம் செப்டம்பர் 10 வெளியாகிறது. அதன் பிறகே விஸ்வரூபம் 2 திரைக்கு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்