ஈராஸுடன் கைகோர்க்கும் ஸ்டுடியோ கிரீன்

வியாழன், 15 மே 2014 (14:17 IST)
இரண்டு நிறுவனங்கள் இணைந்து படம் தயாரிக்கும் போக்கு தமிழில் அதிகரித்துள்ளது. இந்த கூட்டணி தயாரிப்பால் ரிஸ்க் குறைவதுடன் லாபமும் கணிசமாக கிடைக்கிறது.
 
யுடிவி தனியாக தயாரித்த படங்கள் எல்லாம் தோல்வியை தழுவிய நிலையில் புதிய யுக்தியை கண்டுபிடித்தது. அதாவது யார் படத்தை இயக்குகிறார்களோ அவர்களையும் தயாரிப்பில் இணைத்துக் கொள்வது. புறம்போக்கு உள்பட யுடிவி தயாரிக்கும் படங்களில் யுடிவியுடன் படத்தை இயக்குகிறவரும் படத்தயாரிப்பில் பங்கு பெற்றுள்ளார். நான் சிகப்பு மனிதனில் இயக்குனருக்குப் பதில் படத்தின் ஹீரோ விஷால்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ இந்த கூட்டணி தயாரிப்பை தனது எங்கேயும் எப்போதும் படத்திலேயே தொடங்கியது. முருகதாஸ்தான் ஃபாக்ஸ் ஸ்டாரின் பார்ட்னர். பிரமாண்டமான படங்களை தயாரித்து வரும் ஈராஸ் நிறுவனமும் இப்போது இந்த கூட்டணி தயாரிப்புக்கு முன்வந்துள்ளது. 
 
தமிழில் பிஸியாக படங்களை தயாரித்தும், விநியோகித்தும் வரும் ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீனுடன் இணைந்து மூன்று படங்கள் செய்ய ஈராஸ் நிறுவனம் ஒப்பந்தம் போட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் இந்த கூட்டணியினர் தங்களின் படத்தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்