இஸ்லாமியராக மாறிய அழகி மோனிகா, இனி நடிக்கப் போவதில்லையாம்

சனி, 31 மே 2014 (13:11 IST)
இசையமைப்பாளர் யுவனைத் தொடர்ந்து நடிகை மோனிகாவும் இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார். ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்தபின் சினிமாவிலிருந்து முழுமையாக விலகியிருக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் மோனிகா. தங்கர்பச்சானின் அழகி படம் மோனிகாவை பிரபலப்படுத்தியது. அன்றிலிருந்து அழகி என்ற பட்டப்பெயர் அவருடன் இணைந்து கொண்டது. குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து வந்தவர் சிலந்தி படத்தில் படுகவர்ச்சியாக குளியல் காட்சியில் நடித்தார். படமும் சுமாராகப் போகவே மோனிகாவிடமிருந்து தயாரிப்பாளர்கள் கவர்ச்சியை அதிகம் எதிர்பார்க்க ஆரம்பித்தனர். மோனிகா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் நதிகள் நனைவதில்லை படத்திலும் கவர்ச்சியான குளியல் காட்சியில் மோனிகா நடித்துள்ளார்.
 
இந்நிலையில் அவர் திடீரென முஸ்லிமாக மதம் மாறியிருப்பது திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 
மோனிகாவின் தந்தை கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். தாய் இந்து. பொது இடங்களில் செல்வதற்கு பல நடிகைகளைப் போல மோனிகாவும் பர்தா அணிந்துள்ளார். அந்த பர்தா பாசம், இஸ்லாம் மதத்தின் மீது அவருக்கு ஈடுபாட்டை ஏற்படுத்த இஸ்லாம் குறித்து படித்துள்ளார். இஸ்லாமின் கொள்கைகள் ஒருகட்டத்தில் மோனிகாவை ஆகர்ஷிக்க முஸ்லீமாக மாறுவது என முடிவெடுத்தார்.
 
மோனிகாவின் முடிவுக்கு அவரது பெற்றோர் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவரது உறுதியை கண்டு தங்களின் சம்மதத்தை தெரிவித்துள்ளனர். மோனிகாவும் தனது பெயரை எம்.ஜி.ரஹிமா என்று மாற்றியுள்ளார்.
 
இதுவரை ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்த பின் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாகவும் அவர் கூறினார்.
 
இந்தியில் கவர்ச்சி காட்டிக் கொண்டிருந்த வீணா மாலிக்கும் சமீபத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி இஸ்லாமியரை திருமணம் செய்து நடிப்புக்கும் கவர்ச்சிக்கும் குட்பை சொன்னது முக்கியமானது.

வெப்துனியாவைப் படிக்கவும்