இப்போதைக்கு தயாரிப்பாளராக மாட்டேன் - கடன்பட்ட கருணாஸ்

வெள்ளி, 20 ஜூன் 2014 (13:30 IST)
வடிவேலுக்கு அடுத்தப்படியாக ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் விவேக் கதாநாயகனாக பலமுறை முயற்சி செய்தும் நடக்கவில்லை. அவர் நாயகனாக நடிக்க பஞ்சு என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தனர். பெயர் வைத்ததோடு அந்தப் படம் கிடப்பில் போடப்பட்டது. சொல்லி அடிப்பேன் படத்தில் இரண்டு நாயகிகளுடன் ஆக்ஷன் ஹீரோவாக நடித்தார். படம் முடிந்து பத்து வருடத்துக்குப் பக்கத்தில் ஆகப்போகிறது. தயாரிப்பாளரின் கடன் காரணமாக இன்னும் பெட்டிக்குள்தான் இருக்கிறது படம்.
 
கடைசியாக இப்போதுதான் நான்தான் பாலா வெளியாகியிருக்கிறது.
 
இன்னொரு பக்கம் பார்த்தால், விவேக்குக்கு பல வருடங்கள் ஜூனியரான கருணாஸ் ஹீரோவாக பல படங்கள் நடித்துவிட்டார். நந்தாவில் அறிமுகமான இவர் திண்டுக்கல் சாரதி, அம்பா சமுத்திரம் அம்பானி, ரகளபுரம், சந்தமாமா என நான்கு படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். எப்படி...?
 
ஹீரோவாவது என்று முடிவானதும் வேறொருவரை எதிர்பார்க்காமல் தனது சொந்தக்காசைப் போட்டு படமெடுத்தார் கருணாஸ். அம்பா சமுத்திரம் அம்பானியும், ரகளபுரமும் அவரது பாக்கெட்டை ஆழமாக கிழித்துவிட்டது. அந்த கடன்களிலிருந்து இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தேறி வருகிறார் (சந்தமாமா தயாரிப்பு வேறொருவர்).
 
கடன்கள் முடியும்வரை படம் தயாரிக்க மாட்டேன் என்று கூறுகிறவர் தற்சமயம் பத்து படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார். கடன் முடிந்தால் மீண்டும் சொந்தக் காசில் ஹீரோவாகும் மனதைரியம் கருணாஸிடம் எக்கச்சக்கமாக உள்ளது.
 
இந்த தில்தான் கருணாஸை ஹீரோவாக்கியது, இனியும் ஹீரோவாக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்