இனியாவது திருந்துவாரா தாணு...?

சனி, 8 மார்ச் 2014 (16:48 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், தேர்தலை ரத்து செய்யும்படியும் தாணு தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடந்தது. உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் எஸ்.ஜெகசீசன், கே.வெங்கட்ராமன் தலைமையில் நடந்த இந்த தேர்தலில் தாணு அணி படுதோல்வியடைந்தது. கேயார் அணி வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி தேர்தலை செல்லாது என்று அறிவிக்கவும், அதனை ரத்து செய்யவும் தாணு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதிவயேற்க நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. அதன் பிறகு நடந்த விசாரணையின் இறுதியில் வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து தாணு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தற்போது அந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்பதற்கும், கடமையை செய்வதற்கும் தடை கூடாது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இனிமேலாவது தயாரிப்பாளர்கள் சங்கத்தை முடக்கும் இதுபோன்ற கட்டை போடும் கைப்புள்ளத்தனத்தை தாணு நிறுத்துவாரா?

வெப்துனியாவைப் படிக்கவும்