இசைக் கடவுளின் இல்லத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்

புதன், 9 ஏப்ரல் 2014 (14:57 IST)
பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு பிறந்த இசை மேதைகள் அனைவருக்கும் கனவு நாயகனாக இருந்து வருகிறவர் இசை மேதை மொசார்ட். இசைக்கலைஞர்களைப் பொறுத்தவரை மொசார்ட் இசைக் கடவுள்.
அவரது சொந்த தேசத்துக்கு சென்று அவர் வாழ்ந்த வீட்டை, அவர் பயன்படுத்திய பொருள்களை பார்க்க ஒவ்வொரு இசைக்கலைஞருக்கும் ஆசை உண்டு. முஸ்லீம்களுக்கு மெக்கா போல, கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலேம் போல, இந்துக்களுக்கு வாரணாசி போல இசைக்கலைஞர்களுக்கு ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க். அதுதான் மொசார்ட் பிறந்த இடம்.
 
சமீபத்தில் அங்கு சென்று மொசார்ட் வாழ்ந்த வீட்டைப் பார்த்து இதயம் நிறைய பரவசத்துடன் திரும்பியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ்.
 
எல்லோரையும் போல மொசார்டின் வீட்டை பார்க்க வேண்டும் என்பது ஹாரிஸின் கனவு. அவரின் சின்ன வயசிலேயே மொசார்ட் குறித்து ஹாரிஸின் தந்தை பல கதைகள் கூறியிருக்கிறார். அப்போதே இசைக்கடவுளின் இல்லத்துக்கு செல்ல வேண்டும் என்று ஆசை, விருப்பம்.
 
பாரிஸில் அனேகன் படத்தின் கம்போஸிங்கை முடித்த பின் ஆஸ்திரியா சென்று தனது வாழ்நாள் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார். இந்த பயணம் மேலும் சிறந்த இசையை தரவேண்டும் என்ற உத்வேகத்தை அளித்ததாக ஹாரிஸ் குறிப்பிடுகிறார்.
 
நமக்கும் அதுதான் வேண்டும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்