ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்ட அடுத்த சூப்பர் ஸ்டார் விழா

திங்கள், 28 ஜூலை 2014 (17:52 IST)
பிரபல வாரப் பத்திரிகை அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று கருத்துக் கணிப்பு நடத்தியதும், விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டாராக தேர்வு செய்ததும், அதனால் விளைந்த சச்சரவுகளும் இந்த வருடத்தின் டாப் 5 கான்ட்ரவர்ஸியில் ஒன்று. அதன் அடுத்தகட்டமாக அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை மதுரையில் விழா நடத்தி விஜய்க்கு தருவதாக இருந்தது அந்தப் பத்திரிகை. விஜய்யின் ஒப்புதலுடன் விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் தற்போது விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழா ரத்து செய்யப்பட்டதற்குப் பின்னால் இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, இந்த விழாவுக்கு அழைக்கப்பட்ட பிரபல நட்சத்திரங்கள், இயக்குனர்கள் காட்டிய தயக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரை அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான். இந்த விழாவில் கலந்து கொண்டால் அவரை (ரஜினியை) புறக்கணித்த மாதிரி ஆயிடும் என்று சொல்லி வைத்த மாதிரி அனைவரும் எஸ்கேப்.
இன்னொன்று போலீஸ் தரப்பிலிருந்து தரப்பட்ட அழுத்தம். விழா நடப்பதாக இருந்த ஆகஸ்ட் 15 சுதந்திரதினம். போலீஸ்காரர்களுக்கு அது பதற்றமான நாள். அதில் இப்படியொரு பிரமாண்ட விழா நடத்தினால் தலைவலி இரு மடங்காகும். அதனால் போலீஸ் தரப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
சகுனங்கள் அனைத்தும் பிழையாக இருப்பதால் இப்போதைக்கு விழா வேண்டம் என்று முடிவெடுத்துள்ளார் விஜய். எந்த சேதாரமும் இல்லாமல் கத்தி வெளியானால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இத்தனை பிரச்சனைகளுக்கு நடுவில் அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பப்ளிக்காக வாங்கியே விடுவது என்ற விஜய்யின் பிடிவாதம்தான் ஆச்சரியம்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்