அமிதாப்பை இயக்கும் டேவிட் பட இயக்குனர்

திங்கள், 23 ஜூன் 2014 (15:42 IST)
மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தவர் பிஜோ‌ய் நம்பியார். தமிழ், இந்தியில் டேவிட் படத்தை இயக்கிய இவர் அடுத்து அமிதாப் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார்.
 
பிஜோ‌ய் நம்பியாரின் முதல் படம் இந்தியில் வெளியான சைத்தான். படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என இரு தரப்பினரின் பாராட்டையும் பெற்றது. பிஜோ‌ய் நம்பியார் மீது ஒரு எதிர்பார்ப்பையும் சைத்தான் உருவாக்கியது. அடுத்து தமிழ், இந்தியில் டேவிட் படத்தை இயக்கினார். இரண்டிலும் கதை ஒன்று (இந்தியில் மட்டும் லண்டன் பின்னணியில் எக்ஸ்ட்ராவாக ஒரு கதை). நடிகர்கள் வேறு. விக்ரம் இரு மொழிகளிலும் நடித்திருந்தார். 
 
நியூ ஜெனரேஷன் வகையைச் சேர்ந்த இந்தப் படத்தின் திரைமொழியும், அதில் இழையோடிய அபத்தமும், நகைச்சுவையும் ரசிகர்களை பெரிதாக சென்று சேரவில்லை. இந்தியில் படம் தோல்வி. தமிழில் படுதோல்வி. ஆனாலும் பிஜோ‌ய் நம்பியாரின் மீதான நம்பிக்கை அப்படியேதான் உள்ளது.
 
இரண்டு மொழிகளில் படத்தை எடுத்து இரண்டிலும் தோல்வியடைவது எதற்கு என்று இந்தமுறை இந்தியில் மட்டும் படத்தை இயக்குகிறார். இரண்டு நாயகர்கள். அமிதாப்பச்சன் மற்றும் ஃபர்கன் அக்தர். விது வினோத் சோப்ரா தயாரிப்பு. 
 
சைத்தானில் உருவாக்கியெடுத்த நம்பிக்கையை இந்த புதிய படத்தில் பிஜோ‌ய் நிலைநிறுத்துவார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அமிதாப்பும், ஃபர்கன் அக்தரும் அந்த நம்பிக்கையில்தான் அழைத்தவுடன் கால்ஷீட் தந்துள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்